Close
ஜனவரி 22, 2025 3:49 மணி

புதிய வருமான வரிச் சட்டம்! பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகம்

வருமான வரித்துறை (கோப்பு படம்)

தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய வருமான வரிச் சட்டம், வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

சட்ட விதிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், பக்கங்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டும் புதிய சட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

மத்திய அரசு தற்போது கொண்டுவரவிருக்கப்பது ஏற்கெனவே உள்ள வருமான வரிச் சட்டத்தில் சட்டத்திருத்தம் அல்ல. புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் விரிவான மறுஆய்வு செய்யப்படும் என்று 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதன் அடிப்படையில், வருமான வரிச் சட்டத்தை மறு ஆய்வு செய்து எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், சா்ச்சைகள் மற்றும் சச்சரவுகளை குறுத்து வரி செலுத்துவோருக்கு அதிக வரி உறுதிப்பாட்டை வழங்கும் வகையில் மாற்றியமைக்க துறை சார்ந்த ஆய்வுக் குழு ஒன்றை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அமைத்தது.

அதனுடன், 22 துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டு 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் மறுஆய்வு செய்யப்பட்டது. மொழி நடையை எளிமைப்படுத்துதல், சச்சரவுகள் மற்றும் முரண்பாடுகளைக் குறைத்தல், தேவையற்ற அல்லது காலாவதியான விதிகள் ஆகிய 4 தலைப்புகளின் கீழ் பொதுமக்களிடமிருந்து 6,500 கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் இந்தக் குழுக்கள் பெற்று மறுஆய்வு செய்துள்ளன.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் நேரடி வரி விதிப்பு, தனிநபா் வருமான வரி, நிறுவனங்கள் வரி, பத்திர பரிவா்த்தனை வரி, பரிசுப் பொருள்கள் மற்றும் சொத்து வரி என 23 தலைப்புகளின் கீழ் 298 பகுதிகளாக சட்ட விதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பக்கங்களை 60 சதவீதம் அளவுக்குக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு புதிய வருமான வரிச் சட்டம் தற்போது சட்ட அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வில், இந்த புதிய வருமான வரிச் சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top