பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தற்காலிக குடியிருப்புகளை திறந்து வைத்து சாவிகளை வழங்கினார்.
வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கிய அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
திருவண்ணாமலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக மலைச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். மலைச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருவது வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முதல்வர் அவர்களின் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட நபர்கள் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்காலிக வாடகை வீடுகளில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அரசு மூலம் செய்து தரப்பட்டது.
மேலும் தற்பொழுது நல்லவன் பாளையம் ஊராட்சி சமுத்திரம் பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இந்த இடத்தினை மாவட்ட ஆட்சியர் மூலம் கண்டறிந்து தற்காலிகமாக 20 வீடுகள் அமைக்கப்பட்டு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மலைச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மணி, மாநகராட்சி ஆணையாளர், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.