நாமக்கல்:
பவித்திரம் அருகே, ரோடு வசதி கேட்டு, நாமக்கல்-துறையூர் மெயின் ரோட்டில் தோட்டமுடையான்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பவித்திரம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது தோட்டமுடையான்பட்டி. இந்த கிராமத்திற்கு செல்லும் மெயின் ரோடு சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து உள்ளது. இதனால் கிராம மக்கள் அவ்வழியாக செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் ரோட்டை புதுப்பித்துசீரமைத்து தர வேண்டுமென கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும், இதுவரை ரோடு சீரமைத்து தரப்படவில்லை. அதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், நாமக்கல் – துறையூர் மெயின் ரோட்டில், பவித்திரம் பஸ் ஸ்டாப் அருகில் ரோட்டின் குறுக்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் ஏராளமான வாகனங்கள் தேங்கி நின்றன. தகவல் அறிந்து விரைந்து வந்த எருமப்பட்டி போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தோட்டமுடையான்பட்டிக்கு செல்லும் சாலையை சீரமைத்து தந்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்றனர். அவர்களை சமரசம் செய்த போலீசார், அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, விரைவில் ரோட்டை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து 2 மணி நேர தாமத்திற்குப் பின் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.