Close
ஜனவரி 22, 2025 10:49 காலை

3 கிலோ தங்க நகைகளை அணிந்தபடி அண்ணாமலையாரை தரிசனம் செய்த தொழிலதிபர்

தொழிலதிபர் சாம்பசிவராவ்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து கொண்டு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜயவாடாவை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவராவ் எப்பொழுதுமே கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு வெளியில் செல்வது வழக்கம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு மூன்று கிலோ எடை கொண்ட தங்க செயின்கள், அனைத்து விரல்களிலும் மோதிரம், 15க்கும் மேற்பட்ட தடிமனான பிரேஸ்லெட்டுகள் என அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.

தொழிலதிபர் சாம்பசிவராவ் துபாயில் ஹோட்டல் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருவண்ணாமலை கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து நவகிரக சன்னதியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்த தொழிலதிபரை திருக்கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் , பெண்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top