Close
ஜனவரி 22, 2025 9:49 காலை

திருவண்ணாமலை மலை மீது பட்டா இல்லாத வீடுகள் கணக்கெடுக்கும் பணி, பொதுமக்கள் சாலை மறியல்

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருவண்ணாமலை மலை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அளவீடு செய்ய வந்த வருவாய் துறையினரை கண்டித்து பே கோபுர மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் கடந்த மாதம் பெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் தீபமலையின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, மலைப்பகுதியில் உள்ள வஉசி நகரில் 7 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன.

தொடர்ந்து மண் சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக புவியியல் வல்லுநர் குழு தமது ஆய்வு அறிக்கையில் எச்சரித்துள்ளது. மேலும், இந்த மலைப்பகுதி வசிப்பதற்கு உகந்த இடம் இல்லை எனவும், அடுத்தடுத்து கனமழை பெய்தால் மேலும் மண் சரிவும், பாறைகள் உருண்டு விழும் ஆபத்து இருப்பதாகவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும், மேலும் பல்வேறு தீர்த்த குளங்கள் அழிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளது என்று யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கில் திருவண்ணாமலை மலையே சிவன் தான்! அங்கு எப்படி கழிப்பிடங்களும் கட்டிடங்களும் கட்ட அனுமதிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் படி தொடர்ந்து மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து இந்த குழு ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தியது.

மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்த இடத்தையும் ஆய்வு செய்த நீதிபதி நீதிமன்றத்திற்கு உயிர்கள் முக்கியம் வீடுகளுக்காக உயிர்களை பலி கொடுக்க முடியாது என கருது தெரிவித்திருந்தார்.

மலை மீது எத்தனை கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று வருவாய் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். அப்போது வீடுகளை காலி செய்ய விருப்பம் என்ற மனுவை அங்கி இருப்பவர்களிடம் கொடுத்து கையெழுத்து கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அதிகாரிகள் வலுக்கட்டயமாக கையெழுத்தை பெறுவதாக கூறி கடந்த மாதம் 26 ஆம் தேதி பே கோபுரம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால் அதிகாரிகள் தற்காலிகமாக கணக்கெடுப்பை நிறுத்தினர்.

இந்நிலையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மீண்டும் மலைப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மீண்டும் விருப்ப மனுக்களை அதிகாரிகள் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இதை கண்டித்து பே கோபுரம் தெரு, பொதுமக்கள் பே கோபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட துவங்கினர் . இதனால் போக்குவரத்து இருபுறங்களிலும் தடைப்பட்டது. இந்த தகவல் மற்ற பகுதிகளிலும் பரவியதால் சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளி சந்திப்பு , போளூர் ரோடு ஆகிய இடங்களிலும்  1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 50 ஆண்டு காலமாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். கல்லையும் மண்ணையும் சுமந்து கஷ்டப்பட்டு வீடுகளை கட்டி இருக்கிறோம். எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, நகராட்சி வரி என அனைத்தையும் செலுத்தி வருகிறோம். இப்போது எங்களை போ சொன்னால் நாங்கள் எங்கே செல்வது, இங்கேதான் உயிரை விடுவோம் என ஆவேசமாக தெரிவித்தனர்.

அடுத்தடுத்து மூன்று இடங்களில் நடந்த சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை ஆர்டிஓ (பொறுப்பு) செந்தில்குமார், வட்டாட்சியர் துரைராஜ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தியாகராஜன் மற்றும் ஏஎஸ்பி சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்துச் சென்று மறியலில் ஈடுபட்டவர்ககளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

மலைப்பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எதுவும் தற்போது எடுக்கவில்லை, வீடுகள் குறித்த கணக்கெடுப்பு மட்டுமே நடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டதால் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து  மாலையில் விடுவித்தனர்.இந்நிலையில் மூன்று இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாட வீதியில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து தடைப்பட்டு மற்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top