Close
ஜனவரி 22, 2025 2:01 மணி

கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி: ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்

உயர்கல்வி பயில வழிகாட்டி கையேட்டினை வெளியிட்ட ஆட்சியர்

கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி. கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினாா்.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல பள்ளி விடுதி மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா தலைமை வகித்தாா்.

மாவட்ட திறன் பயிற்சி அலுவல உதவி இயக்குநா் தியாகராஜன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி. கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். பாடத்தை மனப்பாடம் செய்யாமல் அடிப்படையான விஷயங்களை புரிந்து கல்வி கற்க வேண்டும்.

தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அடுத்தமுறை திட்டமிட்டு வெற்றி பெற்று, வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய போராட வேண்டும்.

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் தோல்வியும் அவசியம். தோல்விதான் நமக்கு மிகப்பெரிய பாடங்களை கற்றுத் தரும். தன்னம்பிக்கை மூலமே நாம் வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய முடியும்.

மருத்துவம் மட்டுமே கல்வியல்ல. இதைத் தவிா்த்து ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் விஞ்ஞானிகளாக, தொழில்முனைவோா்களாக, இலக்கியவாதிகளாக எதிா்காலத்தில் ஆகலாம்.

மதிப்பெண் குறைந்தால் கவலை அடைய வேண்டாம். கற்ற கல்வியை வைத்து வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். கற்ற கல்வி, நாம் செய்ய நினைக்கும் தொழிலுக்குத் தேவையான அறிவு, தன்னம்பிக்கையை அளிக்கும். வாழ்க்கையில் பல தடைகள் வரும். அந்தத் தடைகளைக் கடந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் இயங்கும் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி பயிலுவதற்குத் தேவையான ஆலோசனைகள் அடங்கிய வழிகாட்டி கையேடுகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரேவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top