Close
ஜனவரி 23, 2025 9:08 மணி

பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவு : நாமக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்த பஞ்சாயத்துகள்..!

நாமக்கல் மாநகராட்சி-கோப்பு படம்

நாமக்கல்:

கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், நாமக்கல் மாநகரை ஒட்டியுள்ள 12 கிராம பஞ்சாயத்துக்களின் நிர்வாகம் மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், தமிழக அரசால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட நாமக்கல் மாநகராட்சியுடன் வள்ளிபுரம், தொட்டிப்பட்டி, சிலுவம்பட்டி. பாப்பிரெட்டிப்பட்டி. காதப்பள்ளி, வீசாணம், மரூர்ப்பட்டி, வேட்டாம்பாடி, ரெட்டிப்பட்டி,

வசந்தபுரம், வகுரம்பட்டி, லத்துவாடி ஆகிய 12 கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டது. அப்போது, இந்த கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பு வகித்து வந்ததால், 12 பஞ்சாயத்துக்களின் நிர்வாகம் தொடர்ந்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

கடந்த 5ம் தேதியுடன் தமிழகம் முழுவதும் உள்ள ஊரக உள்ளாட்சி பிரதிகளின் பதவி காலம் முடிவடைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 20ம் தேதி முதல் 12 ஊராட்சிகளும், நாமக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட் டிற்குள் வந்துள்ளது.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி, கடந்த 3 நாட்களாக, 12 கிராமங்களுக்கும் மாநகராட்சி வருவாய் பிரிவு, பொறியியல் பிரிவு. நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் நேரில் சென்று, அங்குள்ள ஆவணங்களை, ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் இருந்து பெற்று வருகின்றனர்.

பஞ்சாயத்து ஆபீஸ்கள், சமுதாய கூடங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை அனைத்தும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையொட்டி, வகுரம்பட்டி மற்றும் ரெட்டிப்பட்டி பஞ்சாயத்து பகுதிகளில், மாநகராட்சி தூய்மை பணியாளர்களைக் கொண்டு சிறப்பு துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி அந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

நாமக்கல் மாநகருக்கு அருகில் உள்ள 12 கிராம பஞ்சாயத்துக்களும், கடந்த 20ம் தேதி முதல், நாமக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. குடிநீர், தூய்மைப் பணி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, மாநகராட்சி மூலம் அந்த பகுதியில் மேற்கொள்ள அரசு உத்தர விட்டுள்ளது.

அதற்கான பணிகளை துவங்கியுள்ளோம். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில், ரோடு வசதி. தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி போன்றவை மேம்படுத்தப்படும். நாமக்கல் நகராட்சியாக இருந்த போது, அதன் பரப்பளவு 55 சதுர கிலோ மீட்டராக இருந்தது. தற்போது மாநகராட்சியாக ஆன பின்பு, மொத்த பரப்பு 145 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. நாமக்கல் மாநகராட்சியின் மக்கள் தொகை, தற்போது சுமார் 3 லட்சமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top