உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல் மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது கூட்ட நெரிசலில் பல பேர் உயரிழந்ததையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் சுந்தரேச ஐயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுகின்றனர்.கங்கை,யமுனை,சரஸ்வதி ஆகிய புனித நதிகளில் நீராடுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
தை மாத அமாவாசையையொட்டி வட மாநிலங்களில் இந்த அமாவாசையை மௌனி அமாவாசை என்று கருதுகின்றனர்.
கோடிக்கணக்கான பக்தர்கள் கங்கைக்கரையில் குவிந்து நீராட முயன்றனர். அது சமயம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
இது குறித்து வேதனையடைந்த காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைவதற்காகவும், பாதிக்கப்பட்டோர் விரைந்து குணமடையவும் காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.