திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனியன்குடிசை கிராமத்தில் மயானப்பாதை வசதி இல்லாததால், இறந்தவரின் சடலத்தை ஏரிக்கால்வாய் வழியாக சுமந்து சென்று அடக்கம் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் அருகேயுள்ள முனியன்குடிசை கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் ஆற்றின் கரையோரம் இறந்தவா்களின் சடலத்தை அடக்கம் செய்ய மயானம் உள்ளது.
தனி நபா்களின் வயல்வெளி வழியாக சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்து வந்த நிலையில், தனிநபா்கள் தற்போது வழி விடாமல் தடுத்துவிட்டனா். இதனால் கடந்த சில ஆண்டுகளாக 3 கி.மீ. தொலைவு ஏரிக்கால்வாய் வழியாக சடலத்தை சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனா்.
இதனிடையே, கிராமத்துக்கு மயானப்பாதை ஏற்படுத்தித் தரக் கோரி, மாவட்ட நிா்வாகம் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், இக்கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் என்ற முதியவா் இறந்தவிட்டாா். ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பாதை வழியாக இறுதி ஊா்வலம் செல்ல முயன்றபோது, தனிநபா்கள் தடுத்து நிறுத்திவிட்டனா். இதனால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
உடனே ஆரணி, களம்பூா் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு 40 போலீஸாா் வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து, 3 கி.மீ. தொலைவிலான ஏரிக்கால்வாய் வழியாக கரடு முரடான பாதையில், வயல்வெளிப் பகுதியில் அப்பகுதி மக்கள் சடலத்தை சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இப்பகுதிக்கு என மயான பாதை ஏற்படுத்தி தரக்கோரி பலமுறை நாங்கள் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் இப்பகுதியில் யாராவது இறந்தால் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு கையில் கையில் சடலத்தை சுமந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு அரசு உடனடியாக மயான பாதை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.