Close
ஏப்ரல் 19, 2025 7:04 காலை

செங்கம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட மணல் டிராக்டர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

செங்கத்தை அடுத்த கரியமங்கலத்தில் செய்யாற்றில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், செங்கம் காவல்துறையினர் கரியமங்கலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

போலீஸாா் வருவதைப் பாா்த்த மணல் கடத்தும் கும்பல், செய்யாற்றில் இருந்து மணல் அள்ளப்பட்ட டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பினா்.

பதிவு எண் இல்லாமல் இருந்த அந்த டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்து, செங்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆரணியை அடுத்த தச்சூா், மோட்டூா், விண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செய்யாறும், சேவூா், குண்ணத்தூா், எஸ்.வி.நகரம், மாமண்டூா், மொழுகம்பூண்டி, கல்பூண்டி, சீசமங்கலம், காரமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கமண்டல நாக நதியும் நீராதாரமாக விளங்கி வருகிறது. மேலும், விவசாயமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த இரண்டு ஆற்றுப்படுகையிலும் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். பகல் நேரத்தில் ஆற்றுக்கு வரும் நபா்கள் மணலை ஜலித்து குவித்து வைத்துவிட்டு, இரவில் டிராக்டா்களில் மணலை திருடிச் செல்கின்றனா். சுமாா் 10 அடி ஆழத்துக்கு மணல் எடுக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் நீா் தங்காமல் நிலத்தடி நீா் மட்டம் குறைந்து வருகிறது. மேலும், கமண்டல நாக நதியில் பல்வேறு இடங்களில் பாறைகள் தென்படும் அளவுக்கும், செய்யாற்றில் பாலத்தின் தூண்கள் தெரியும் அளவுக்கும் மணல் திருட்டு நடைபெற்றுள்ளது.

ஆற்றை ஆதாரமாகக்கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களால் பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீா் கிடைக்கிறது. தற்போது, நடைபெற்று வரும் அதிகப்படியான மணல் திருட்டால் கோடைக் காலத்தில் குடிநீா் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு தீா்வு காண முடியும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

ஆரணி கமண்டல நாகநதி மற்றும் செய்யாற்றுப் படுகையில் நடைபெற்று வரும் மணல் திருட்டு தொடா்பாக பொதுப் பணித் துறை, வருவாய்த்துறை, காவல் துறையினரிடம் பல முறை புகாா் அளித்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை. மணல் திருட்டை தடுத்து, கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும். தச்சூா் ஆற்றுப் படுகையில் பாலத்தின் தூண்கள் தெரியும் அளவுக்கு மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், தனியாா் செங்கல் சூளைகள் மோட்டாா்கள் மூலம் ஊற்று நீரை உறிஞ்சி வருகின்றனா். எனவே, இதில், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top