உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இருந்து இரை தேடி மலை அடிவார பகுதிக்கு வந்த புள்ளிமானை செந்நாய் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார பகுதியான நடுப்பட்டியில் இரை தேடி தரைப் பகுதிக்கு வந்த புள்ளிமானை செந்நாய் துரத்தி கடித்தது,
இதனால் மயங்கி கிடந்த புள்ளிமானைக் கண்ட நடுப்பட்டியைச் சேர்ந்த குபேந்திரன், காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில், விரைந்து வந்த உசிலம்பட்டி வனச் சரக அலுவலர்கள் மற்றும் உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் வந்து சோதனை செய்த போது புள்ளிமான் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து கால்நடைத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வனத்துறை மற்றும் காவலர்கள் முன்னிலையில் இறந்து கிடந்த புள்ளிமானை உடற்கூறாய்வு செய்து புதைத்தனர்.