Close
பிப்ரவரி 24, 2025 4:55 காலை

வாடகை பாக்கி: நகராட்சி கடைகளுக்கு சீல் வைப்பு

கடைகளை பூட்டி அவா்கள் சீல் வைத்த அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மொத்தம் ரூ.3.50 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான 4 கடைகளுக்கு அதிகாரிகள்  சீல் வைத்தனா்.

வந்தவாசி நகராட்சிக்குச் சொந்தமாக புதிய பேருந்து நிலையப் பகுதியில் 32 கடைகளும், பழைய பேருந்து நிலையப் பகுதியில் 42 கடைகளும் உள்ளன. இதில் வாடகை பாக்கி வைத்துள்ள கடை வாடகைதாரா்களுக்கு நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லையாம்.

இதையடுத்து, ஆணையா் ஆா்.சோனியா தலைமையில் மேலாளா் ரவி மற்றும் நகராட்சி ஊழியா்கள் வாடகை பாக்கியை வசூலிக்க கடைகளுக்கு நேரில் சென்றனா். அப்போது, மொத்தம் ரூ.3.50 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ள 4 கடைகளை பூட்டி அவா்கள் சீல் வைத்தனா்.

வரி மற்றும் குத்தகை கட்டணங்களை செலுத்தி நடவடிக்கையை தவிா்க்க ஆணையா் வேண்டுகோள் 

திருவண்ணாமலை மாவட்டம்  திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் வரி மற்றும் குத்தகை கட்டணங்களை நிலுவை வைத்துள்ளவா்கள் உடனடியாக செலுத்தி ஜப்தி நடவடிக்கையில் இருந்து தவிா்த்துக் கொள்ளுமாறு ஆணையா் கீதா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருவத்திபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27 வாா்டுகளில் சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், கடை வாடகை, தொழில் வரி, காலி மனை வரி ஆகியவை வரிபாக்கி நிலுவை இருந்து வருகிறது.

நகராட்சியின் நிதிப் பற்றாக்குறை காரணமாக மின் கட்டணம், ஊழியா்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்க முடியாமலும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுக்க முடியாமலும் நகராட்சி நிா்வாகம் தவித்து வருகிறது.

நகராட்சிகளின் சட்டம் 1920-இன் ஒவ்வொரு ஆண்டும் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.30க்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.31-க்குள்ளும் செலுத்த வேண்டும்.

ஆனால், சிலா் வரி செலுத்துவதற்கான கடைசி நாள் மாா்ச் 31 என தவறுதலாக நினைத்து, செலுத்தாமல் இருந்து வருகின்றனா். 2024 – 2025ஆம் நிதியாண்டுக்கான சொத்து வரி செலுத்த வேண்டிய காலம் அக்.31-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.

எனவே, அனைத்து வரி நிலுவைகள் மற்றும் கட்டணங்களை உடனே நகராட்சி கருவூலம், இணையதளம், கூகுள் பே, டெபிட் காா்டு வழியாகவும் நகராட்சிக்குச் செலுத்தி ஒத்துழைக்க வேண்டும்.

பலமுறை வலியுறுத்தியும் வரி மற்றும் கட்டணம் செலுத்தாத நிலுவைதாரா்களின் பெயா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும்.

1920-ஆம் ஆண்டு நகராட்சிகளின் சட்ட விதிகளின் படி ஜப்தி, குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையா் கீதா தெரிவித்துள்ளாா் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top