கடந்த சில நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்ற கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வாதாரம், ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு, மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அனுமதி இன்றி திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இங்கு அனுமதி இல்லை தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவினை 5 பேர்கள் மட்டும் நேரில் சென்று வழங்குங்கள் என எடுத்து கூறினார்
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளர்கள் 5 பேர் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று தங்கள் கோரிக்கை மனுவை அளித்து கலைந்து சென்றனர்.
இதில் திண்டிவனம் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் இராமஜெயம், விஜயகுமார், ஓரல் ராபர்ட், விழுப்புரம் கல்லூரி அன்பு, சங்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.