விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த பழனி, இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையராகப் பணியாற்றி வந்த ஷேக் அப்துல் ரஹ்மான்(34) புதிய மாவட்ட ஆட்சியராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்தின் 23ஆவது ஆட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஷேக் அப்துல் ரகுமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது…
விழுப்புரம் மாவட்ட மக்கள் எந்த குறைபாடுகள், குறைகள் இருந்தாலும் என்னை நேரடியாக அணுகலாம். விழுப்புரம் மாவட்டம் விவசாயம் அதிகம் நடைபெறும் மாவட்டம் என்பதால், விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு பிரதான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்களின் கோரிக்கைகள், தேவைகள் என்னஎன்ன என்பதைஆராய்ந்து அதைபூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம்.
அண்மையில் ஃபென்ஜால் புயல் பேரிடரால் மாவட்டத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், மறுவாழ்வுப் பணிகளையும் மேற்கொண்டோம். மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்தி, மக்களுக்கு பேரிடரிலிருந்து மீட்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
விழுப்புரம் மாவட்டத்துக்காக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் துரிதப்படுத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக ஓரணியாக இணைந்து பணியாற்றுவோம். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எது முக்கியத்துவமோ, அதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தின் தொழில்வளர்ச்சிக்காக சிட்கோ, சிப்காட், தகவல் தொழில்நுட்பப் பூங்கா, சிறு டைடல் பூங்கா ஆகியவை அமைந்துள்ள நிலையில், அதன் மூலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
பொறியியல் பட்டதாரியான ஷேக் அப்துல் ரஹ்மான், 2017ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சியைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் குளித்தலை சார் ஆட்சியராகவும், 2021ஆண்டில் சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியராகவும், 2021 நவம்பர் முதல் 2023 அக்டோபர் வரை சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும், 2023 அக்டோபர் முதல் 2024, ஜூன் மாதம் வரை ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றிய அவர் 2024 ஜூன் மாதம் முதல் நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையராகவும் பணியாற்றினார்.
சென்னை வில்லிவாக்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர் மாவட்ட ஆட்சியர். இவரது மனைவி பத்மஜா, விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆட்சியருக்கு ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷி நிகம், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உள்ளிட்ட துறை பல்துறை அலுவலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.