நாமக்கல் :
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு, சங்க மாவட் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன், தமிழ்நாடு நிலஅளவை அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை, தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத, 21 மாத நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில், இளைஞர்களுக்கு காலமுறை ஊதிய நடைமுறையில் பணி வழங்கி நிரப்ப வேண்டும்.
முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை, அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இத்திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
மருத்துவத்துறை, நகராட்சி, மாநகராட்சி, டவுன் பஞ்சாயத்து உள்ளிட்ட துறைகளில் தனியார் நிறுவனங்கள் மூலம், அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்வதை ரத்து செய்து, காலமுறை ஊதிய நடைமுறையில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.