Close
பிப்ரவரி 23, 2025 11:50 காலை

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

மனுக்களை பெற்றுக்கொண்டஆட்சியர் தர்பகராஜ்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 382  மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கூட்டத்தில் 382 பேர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 382 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

உதவித்தொகை

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ சார்பாக தூய்மை பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்று இயற்கை மரணம் அடைந்த வாரிசு தாரருக்கு இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு தொகை ரூபாய் 25,000/-க்கான வங்கி வரைவோலையினை வழங்கினார்கள். மேலும் சாலை விபத்தில் மரணமடைந்தவரின் வாரிசுதாரருக்கு சாலை விபத்து நிவாரண தொகையாக ரூபாய் 1,00,000/-க்கான காசோலையினை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, நல உதவி அலுவலா் சூா்யா, வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணி

மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் அறிவுறுத்தலின்படி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 59 மனுக்களும்,

செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 30 மனுக்களும், பெறப்பட்டு நடவடிக்கைமேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், மண்டல துணை வட்டாட்சியா்கள் மற்றும் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top