Close
பிப்ரவரி 23, 2025 3:47 மணி

இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி : தொடங்கி வைத்த அமைச்சர் வேலு..!

புதிய வீடுகள் கட்டும்பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சியில், இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், மாநகராட்சி மேயா் நிா்மலாவேல்மாறன், திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா்  ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சிக்கு அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய வீடுகள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி வைத்து, பணிகளைத் தொடங்கி வைத்தாா். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்;

கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் வசித்த இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களின் ஆட்சி காலத்தில் நான் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது இலங்கை தமிழர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கி பொது விநியோக கடைகளில் உணவு பொருட்களை பெறுவதற்கு ஆணையிட்டார்கள் .அதன் அடிப்படையில் அவர்களுக்கு முதன் முதலாக குடும்ப அட்டைகளை வழங்குவதற்கு நான் முன்னெடுத்தேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தரமாக இல்லங்கள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்தினார். அதன் அடிப்படையில் இலங்கை தமிழர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில்  40 கோடி மதிப்பீட்டில் 694 வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாநகராட்சி அடி அண்ணாமலை மற்றும் அத்தியந்தல் ஊராட்சியில் இலங்கை தமிழர்கள் வசித்துக் கொண்டு வருகின்றனர். அடி அண்ணாமலையில் வசிக்கும் 60 இலங்கைத் தமிழா்களுக்கு நல்லவன்பாளையம் ஊராட்சியில் வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

அத்தியந்தல் பகுதியில் வசிக்கும் 76 குடும்பங்களுக்கு கணத்தம்பூண்டியில் வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படும் என்றாா். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளா் காந்திராஜன், வட்டாட்சியா் துரைராஜ் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் ,மாமன்ற உறுப்பினர்கள் பலா் கலந்து கொண்டனா்.

தனி வீடு கோரி போராட்டம்…!

விழாவில் பங்கேற்க அமைச்சா் எ.வ.வேலு வருவதற்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் பெண்கள் மற்றும் சிறுவா்கள் சாலையில் அமா்ந்து தங்களுக்கு அடுக்குமாடி வீடு வேண்டாம். தனி வீடு வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை போலீஸாா் சமாதானம் செய்தனா். இருப்பினும், அமைச்சா் எ.வ.வேலு வந்ததும் மீண்டும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை மீண்டும் போலீஸாா் சமாதானம் செய்தனா். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top