Close
பிப்ரவரி 24, 2025 4:31 மணி

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை மறுநாள் 26 ஆம் தேதி  மகா சிவராத்திரி விழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை பக்தர்களின் வேண்டுதலுக்கு பலன் அளிக்கும் ஒரு புண்ணிய ஸ்தலமாகும்.

திருவண்ணாமலையில் வீற்றிருக்கக்கூடிய அருணாச்சலேஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. நினைத்தாலே முக்தி தரும் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் 26 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோயில் முழுவதும் மின் அலங்காரங்கள் பூ அலங்காரங்கள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் பகல் 2 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும். பகல் 12:00 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் மாலை 5 மணிக்கு சாய ரட்சை அபிஷேகமும் நடைபெறும். அதைத்தொடர்ந்து இரவு எட்டு மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும்.

மேலும் இரவு 7.3௦ மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும் இரவு 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 2.30 மூன்றாம் கால பூஜையும் அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜைகளும் நடைபெறும்.

மூன்றாம் கால பூஜையை உமையாளும், நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் நிறைவேற்றுவதாக ஐதீகம்.

மேலும் நள்ளிரவு 12 மணிக்கு கருவறையின் மேற்கு திசையில் அருள் பாலிக்கும் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். அன்று மட்டும் தாழம்பூ பூஜை நடைபெறுவது சிறப்பாகும்

இந்து அறநிலையத்துறை சார்பில் நாளை மறுநாள்  மாலை 6:00 மணி முதல் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் கலைஞர் சிலை அருகில் ஈசானிய மைதானத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

சுகிசிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம், மற்றும் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் , இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் பக்தி இன்னிசை கச்சேரி, கைலாய வாத்தியம், கர்நாடக இசை, கும்மியாட்டம், கிராமிய நிகழ்வுகள், நாட்டிய நாடகம், நாத சங்கமம்ஆகியவை 27 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 6:00 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ,மற்றும் அறங்காவலர்கள், அருணாச்சலேஸ்வரர் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top