Close
ஏப்ரல் 19, 2025 8:52 காலை

மாடித்தோட்டம், இயற்கை விவசாயம்.. அசத்தும் ஆலங்குடி பெண்..!

புதுக்கோட்டை

மாடித்தோட்டத்தை பார்வையிடும் குடுமியான் மலையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள்

மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் என்றெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தொடங்குகின்றனர்.ஆனால் அதை முழுமையாக வெற்றிகரமாக செய்து காண்பிப்பவர்கள் வெகு சிலரே.

அப்படி ஒருவர் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மாஞ்சான் விடுதி ஊராட்சி மழவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து(42) என்ற பெண்மணி ஆவார்.

 இவர் கடந்த 2021 -ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து வருடங்களாக தனது வீட்டு மொட்டை மாடியில் மாடித்தோட்டம் அமைத்து அதில் இயற்கை முறையில் கீரை வகைகள் காய்கறிகள் பழங்கள் மலர்கள் மூலிகைகள் மற்றும் அழகு தாவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும்
வெற்றிகரமாக சாகுபடி செய்து வருகிறார்.

இந்த எண்ணம் எப்படி தோன்றியது என்று கேட்டபோது கோவிட் லாக்டவுன் சமயத்தில் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பதற்கு மிகவும்சிரமமாக இருந்தது. அப்போதுதான் முதன்முதலில் சிறிய அளவில் தொட்டிகளில் காய்கறிச்செடிகள் வைக்க ஆரம்பித்தேன் என்று கூறுகிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவர் தன்னுடைய மூன்று பிள்ளைகளை கணவரின் இறப்புக்குப் பிறகு சிங்கிள் மதர் ஆக இருந்து வளர்த்து வருவதோடு 11 வருடங்களாக தமிழக அரசின் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராக அரசுப் பணியிலும் இருக்கிறார் என்பதுதான்.

சாதாரணமாக சமையல், வீட்டு வேலை அலுவலக வேலை இவற்றை செய்வதே பெரும்பாடாக இருக்கும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகள் என அனைவரையும் பராமரித்துக் கொண்டு இயற்கை விவசாயத்தையும் சிறப்புடன் செய்து எல்லா பெண்களுக்கும் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.

இதற்கெல்லாம் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்டால் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பும் அலுவலகம் விட்டு வந்த பிறகும் சில மணி நேரங்கள் மாடித்தோட்டத்துக்காக செலவு செய்வேன் என்று சாதாரணமாக கூறுகிறார். கேட்கும் நமக்குத் தான் ஆச்சரியமாக இருக்கிறது.

750 சதுர அடிகள் கொண்ட இவரது மாடித்தோட்டத்தில்எந்தவிதமான செயற்கை உரங்களோ பூச்சிக்கொல்லி மருந்துகளோ இல்லாமல் முற்றிலும் இயற்கை முறையில் அமிர்த கரைசல், மீன் அமிலம்,
பஞ்சகவ்யம், வேப்பெண்ணெய் கரைசல், மண்புழு உரம், இலை மக்கு உரம், ஆடு மாடு சாணங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உரம் போன்றவற்றையே பயன்படுத்துகிறார்.

இடம் சிறியதாக இருந்தாலும் இவரது தோட்டத்தில் பழங்களில் 28 வகையும், மூலிகையில் 15 வகையும்,கீரையில் 12 வகையும், பூக்களில் 8 வகையும், காய்கறியில் 15 வகையும், கிழங்குகளில் 10 வகையும் இருப்பதாக கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.

புதுக்கோட்டை
ஆலங்குடி வட்டம் மாஞ்சான் விடுதி ஊராட்சி மழவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து

அதிலும் குறிப்பாக திராட்சை, கும்குவாட் ஆரஞ்ச், பேஷன் ஃப்ரூட், மல்பெரி, காந்தாரி மிளகாய், நெய் மிளகாய், கொடி உருளை, மூக்குத்தி அவரை, லகடாங் மஞ்சள்,சிம்ரி மஞ்சள்,கருப்பு இஞ்சி,கருமஞ்சள், மா இஞ்சி, மலேசியன் கோவைக்காய், மலேசியன் மிளகாய் என்று அபூர்வமான தாவர வகைகளை வைத்து வளர்த்து வருகிறார்.

100 க்கும் மேற்பட்ட பைகளில் செடிகள் உள்ளது. அதற்கு தண்ணீர் ஊற்றவே 2 மணி நேரம் ஆகிறது. செடிகளுக்கு நோய் தாக்கம் ஏற்படுவதும் கோடை காலத்தில் கடுமையான வெயிலை சமாளிப்பதும் சவாலான விஷயம் என்று குறிப்பிடுகிறார்.

இவ்வளவு சிரமப்பட்டு இதை செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு எங்கள் குடும்பத்திற்கு நஞ்சில்லா காய்கறிகள்பதப்படுத்தப்படாத பழங்கள் குறைந்த செலவில் கிடைக்கிறது, உடலுக்கும் ஆரோக்கியம் என்கிறார்.

வெற்றிகரமான மாடித் தோட்டத்தை தொடர்ந்து நிவிஸ் கார்டன் என்ற பெயரில் யூடியூப் சேனல், வாட்ஸ் அப் குரூப், முகநூல் பக்கம் போன்றவற்றையும் அமைத்து நிர்வகித்து வருகிறார்.

மாடித்தோட்டம் அமைப்பது இயற்கை விவசாயம் செய்வது இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது போன்றவற்றையும் பரவலாக நிறைய பேருக்கு காணொளிகள் மூலம் சொல்லிக் கொடுக்கிறார். நிறைய பேருக்கு ஆலோசனைகள் கொடுப்பவராகவும் இருக்கிறார்.

மேலும் அவரை தொடர்பு கொண்டு எங்களுக்கு விதைகள் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு தனது மாடி தோட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட விதைகளை இலவசமாகவே கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறார்.

புதுக்கோட்டை
காய்கறிகள்

மேலும் தமிழ்நாடு அளவில் நடக்கக் கூடிய மரபுசார் காய்கறிகள் திருவிழா மற்றும் கண்காட்சி களில் கலந்து கொள்கிறார். இதன் மூலம் மரபுசார் விதை சேகரிப்பாளர்களோடு தொடர்பு கொண்டு நிறைய தகவல்களை தெரிந்து கொள்வதாக கூறுகிறார்.

இவரது முயற்சிகள் பற்றி கேள்விப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கிராமங்களில் தங்கி நேரடியாக விவசாய அனுபவங்களைபெறும் கிராமப்புற வேளாண்பணி திட்டத் தின் ஒரு பகுதியாக இவரதுமாடித்தோட்டத்தை நேரில் வந்து பார்வை யிட்டு செல்கின்றனர்.

மேலும் அலுவல் ரீதியாக இவரது கிராமநிர்வாகஅலுவல கத்திற்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இவர் இயற்கை முறையில் பாரம்பரிய ரகங்களையும் தனது மாடி தோட்டத்தில் வளர்ப்பது குறித்துக் கேள்விப்பட்டு மிகுந்த ஆச்சரியம் அடைகின்றனர்.

இவரும் தனது பணிப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ஆர்கானிக் ஃபார்மிங் பற்றி குறிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவதோடு பாரம்பரிய ரகங்களை அவர்களது விவசாய நிலங்களில் வளர்ப்பதற்கும் ஊக்கமளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வீரமுத்துவிடம் பேசியபோது: “விதைகளே பேராயுதம்” என்ற நம்மாழ்வார் அய்யாவின் அறிவுரை படி விதை பரவலாக்கம் செய்து வருகிறேன்.எனது தேவைக்கு அதிகம் விளையும் காய்கறி , பழங்கள் , விதைகளை பிறருக்கு பகிர்ந்து வருகிறேன்.வருங்கால தலைமுறைக்கு மரபு விதைகளை கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

“நாளைய உணவிற்கு இன்றே விதை விதைப்போம்””அனைவரும் இயற்கை விவசாயத்தை நேசிப்போம்”என்கிறார்.

அன்றாடம்அதிகரித்து வரும் காய்கறிகள் பழங்களின் விலை உயர்வு, விதவிதமான நோய்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு என்று இருக்கும் இன்றைய காலகட்டத்தில்…நமது வீட்டிலேயே இது போல இயற்கை முறையில் மாடித் தோட்டம் அமைப் பதால் செலவு குறைவ தோடுமட்டுமல்லாமல் நல்ல தொரு உடற் பயிற்சி யாக வும் மன அழுத்தத்தை குறைக் கும் காரணியாகவும் இருக்கும்.

நாட்டின் பொருளா தாரம் தன்னிறைவு பெற இது போன்ற சிறிய முயற்சிகளை நமது இல்லத்தில் இருந்தே தொடங்கு வோம். மாடித்தோட்டம் பற்றி கூடுதலான தகவல் களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இவரது நிவிஸ் கார்டன் என்னும் youtube சேனலில் சென்று பார்க்கலாம்.
https://youtube.com/@veerasaravanan-?si=vtRZOtbyA7TbOWGD
மற்றும்அலைபேசி எண் +919965952598

 தொகுப்பு: ஈரநெஞ்சம் மகேந்திரன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top