Close
பிப்ரவரி 25, 2025 1:06 காலை

2 விஏஓக்கள் சஸ்பெண்ட்டை வாபஸ் பெறக்கோரி நாமக்கல்லில் விஏஓக்கள் தொடர் தர்ணா போராட்டம்..!

2 விஏஓக்கள் சஸ்பெண்ட்டை ரத்து செய்யக்கோரி, நாமக்கல் ஆர்டிஓ அலுவலகம் முன்பு, திரளான விஏஓக்கள் தரையில் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் :

சட்ட விரோத கல்குவாரி விவகாரத்தில் 2 வி.ஏ.ஓக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் ஆர்டிஓ ஆபீஸ் முன்பு 100க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓக்கள் தரையில் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் 7 கல் குவாரிகள் உள்ளன. இவற்றில் 2 குவாரிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மற்ற 5 குவாரிகளில் கல் உடைத்து எடுக்க அனுமதியில்லை.

எனினும், அந்த குவாரிகளிலும் முறைகேடாக கல் வெட்டி எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 18ம் தேதி ஆய்வு மேற்கொண்ட வருவாய் துறை அதிகாரிகள் அங்கு கல் உடைக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உள்பட 23 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல், சேந்தமங்கலம் போலீஸ் நிலையங்களில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக கொண்டமநாயக்கன்பட்டி விஏஓ ஜான்பாஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி கிராம விஏஓ கோகிலா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நாமக்கல் ஆர்டிஓ பார்தீபன் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி புவியியல் ஆய்வாளர் ஒருவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே 2 விஏஓக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று நாமக்கல் ஆர்டிஓ அலுவலக வளாகத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட விஏஓக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது முறைகேடான கல்குவாரி தொடர்பாக கடந்த ஓராண்டுக்கு முன்பு சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உயரதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் அரசுக்கு முறையாக தகவல் அளிக்கவில்லை எனக் கூறி 2 விஏஓக்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெறப்பட்டால் மட்டுமே போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர். இதனிடையே விஏஓக்கள் போராட்டம் காரணமாக பல்வேறு பணிக்களுக்காக மாவட்டம் முழுவதும் உள்ள விஏஓ அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top