Close
மார்ச் 4, 2025 2:42 காலை

மாட வீதியில் குடியிருப்பவர்களின் வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம்

மாட வீதிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை இருக்கும் நிலையில்தடுப்புகள் அமைத்து போக்குவரத்து காவலர்கள்

திருவண்ணாமலை மாட வீதியில் வசிப்போரின் நான்கு சக்கர வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, விண்ணப்பப்  படிவம் வழங்கப்பட்டது.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் பல மடங்காக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மாடவீதி மற்றும் அதனை ஒட்டியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இதனால் திருவண்ணாமலை நகர மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்து, இதற்கு ஒரு தீர்வு காண மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.

கடந்த மாதம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில்  ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாட வீதிகளில் ஆட்டோ, காா், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான 4 சக்கர வாகனங்களுக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிப்பது, மாட வீதிகளில் இரு சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதேபோல, நகரின் பல தெருக்களை ஒரு வழிச்சாலையாக மாற்றுவது, இதுவரை மாட வீதிகள் வழியாக சென்று வந்த அரசு, தனியாா் பேருந்துகளை மாற்று வழியில் இயக்குவது என்றும், இந்த நடைமுறைகள் அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாட வீதியில் குடியிருப்போர் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும், உரிய ஆவணங்களை சரிபார்த்து அடையாள அட்டை வழங்கப்பட உள்ளன. அதையொட்டி, அதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது.

வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்டோர்  விண்ணப்பங்களை வழங்கினர். தொடர்ந்து இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

மாட வீதியில் குடியிருப்போர், கட்டணமின்றி விண்ணப்பங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடியிருப்பு வாசிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முழுமையாக சரி பார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்பங்கள் அளித்த குடியிருப்புவாசிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top