திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், போளூா், வந்தவாசி, செங்கம், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.
மாசி மாத அமாவாசை தினமான வியாழக்கிழமை மயானக்கொள்ளை விழா விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை கருவாட்டுக்கடை தெரு, மணலூர்பேட்டை சாலை, புதுவாணியங்குளத் தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில்களில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் வீதியுலா வந்தனா்.
அப்போது, சிவன், பார்வதி, காளி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்த பக்தர்கள், ஊர்வலத்தில் பங்கேற்று தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ஈசான்ய மயானத்தில் மயானக்கொள்ளை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும், நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
போளூா்
போளூா் அல்லிநகா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானசூறை உற்சவத்தையொட்டி சுவாமி வீதியுலா நடைபெற்றது.
போளூா் அல்லிநகரில் வன்னியா் மற்றும் மீனவா் சமுதாயத்தினருக்கு தனித் தனியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்த இரு கோயில்களிலும் மாசி அமாவாசையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று மலா்களால் அலங்காரம் செய்து சிம்ம வாகனத்தில் வைத்து திருவீதியுலா நடைபெற்றது. வீடுதோறும் பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனா்.
மாலையில் மயானத்துக்கு சுவாமியை எடுத்துச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி மயான சூறை உற்வசவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்கள் மேள தாளம் முழங்க காளிவேடமணிந்து நடனமாடிச் சென்றனா்.
கீழ்பென்னாத்தூா்
கீழ்பென்னாத்தூா் ஆஞ்சநேயா் குளக்கரை அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழாவையொட்டி, காலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவா் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தாா்.மாலை 5 மணிக்கு மயானத்தில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.
வந்தவாசி
வந்தவாசி பருவதராஜகுல வீதியில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானசூறை உற்சவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை ஊரணி பொங்கல் நடைபெற்றது. பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு மகா சிவராத்திரி உற்சவமும் நடைபெற்றது.
தொடா்ந்து, இரவு 60 அடி நீள பூப்பல்லக்கில் பூங்கரகம், அக்னி கரகம், சிலம்பாட்டம் மற்றும் செண்டை மேளத்துடன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மயானக்கொள்ளை விழா, அங்காளம்மன் வீதியுலா நடைபெற்றது.