கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை பெங்களூர் பேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் 88வது திவ்ய தேசமாக கோவில் கொண்டு எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ விஜயராக பெருமாளுக்கு ஆண்டு தோறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி குரோதி ஆண்டு மாசி மாதம் பிரம்மோற்சவம் கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் மார்ச் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான இன்று திருப்புட்குழி விஜயராகவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து திருவாபரணங்கள்,மலர் மாலைகள், அணிவித்து ஸ்ரீதேவி, பூதேவி களுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து, மாவிலை தோரணங்கள் பூமாலைகள் வாழைமரம் கட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் எழுந்தருளினார்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க வேதபாராயண கோஷ்டியினர்பாடிவர, கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்ட வாரு பக்தர்கள் திருத்தேரின் வடத்தினை பிடித்து இழுத்து செல்ல திருப்புட்குழி, பாலு செட்டி சத்திரம், வீதிகளில் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
திருத்தேர் உற்சவத்தில் ஏராளமான பஜனை கோஷ்டிகள் கலந்து கொண்டு பஜனை பாடல்களை மனம் உருக பாடியபடி சென்றனர்.
வழிநெடுக்கிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து திருத்தேரில் எழுந்தருளி வந்த விஜயராகவ பெருமாளுக்கு கோவிந்தா கோஷமிட்ட வாரு கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
திருத்தேர் உற்சவத்தில் காஞ்சிபுரம், திருப்புட்குழி, பாலு செட்டி சத்திரம்,சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
திருத்தேர் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.