Close
ஏப்ரல் 19, 2025 8:26 மணி

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய மாசி மாத பிரம்மோற்சவ விழா தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தின் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் அதிகாலை துவங்கியது..

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான மாசி பிரம்மோற்சவ விழா நேற்று மாலை விநாயகர் பூஜையுடன் துவங்கி இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெண்பட்டு உடுத்தி பல வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது .

இதனைத் தொடர்ந்து உற்சவர் லட்சுமி சரஸ்வதி தேவியுடன் கொடிமரம் அருகே நீல நிற பட்டுடுத்தி, ஏலக்காய் மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு மலர் மாலைகள் சூடி எழுந்தருளினார்.

முன்னதாக காமாட்சி அம்மன் உருவம் பதித்த கொடி பட்டம் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு திருக்கோயிலை வலம் வந்த பின்பு மேளதாளம் வான வேடிக்கை முழங்க மாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்றபட்டது.

மேலும் மூலவர் சன்னதி எதிரே அமைக்கப்பட்ட மற்றொரு கொடிமரத்திற்கும் சிறிய அளவிலான பட்டம் கொடியேற்றப்பட்டது ‌

இன்று முதல் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் சிறப்பு வாகனத்தில் ராஜவீதிகளில் காஞ்சி காமாட்சி அம்மன், லக்ஷ்மி, சரஸ்வதி தேவியுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

முக்கிய நிகழ்வான தங்கத்தேர் வைபவம் 11ம் தேதி நடைபெறவுள்ளது.

கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவினை ஒட்டி திருக்கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top