திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசி மாத தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
கீழ்பென்னாத்தூரில் நடந்த அங்காள பரமேஸ்வரி அம்மன்கோயில் தேரோட்ட விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கீழ்பென்னாத்தூர் ஆஞ்சநேயர் குளக்கரை மேட்டில் புற்று உருவில் அமைந்து அருள் பாலித்து வரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேர்த் திருவிழா 10நாட்கள் நடைபெறவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான 72ம்ஆண்டு தேர்த் திருவிழா கடந்த மாதம் 26ம்தேதி காலை விநாயகர் பூஜையுடன் சக்தி அழைப்பு, கரகஜோடிப்பு, கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மதியம் 3 மணியளவில் 32 அடி உயர தேரில் வாழைமரம், இளநீர் குலைகள், மாவிலை மற்றும் வண்ண வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உற்சவர் அம்மனை தேரில் அமரச் செய்து மேளதாளத்துடன் அதிர்வேட்டுகள் முழங்க திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
அதைத்தொடர்ந்து முக்கிய சாலைகள் வழியாக சென்ற தேர் இரவு கோயில் அருகே உள்ள நிலையை அடைந்தது. விழாவில், கீழ்பென்னாத்தூர் கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி தேரோட்டம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த பிப்.26-ஆம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 27-ஆம் தேதி மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.
தொடா்ந்து, விழாவின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை மூலவா் மற்றும் உற்சவா் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் உற்சவா் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து, தேரை கோயில் தா்மகா்த்தா புண்ணியமூா்த்தி வடம் பிடித்து தொடங்கி வைத்தாா்.
இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தோ் மீது கொழுக்கட்டை, சுண்டல், நாணயங்கள், நவதானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை வீசி வழிபட்டனா். பக்தா்கள் காளி வேடம் அணிந்தும், முதுகில் அலகு குத்தியும், உரல் இழுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.
வெம்பாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், செய்யாறை அடுத்த அசனமாபேட்டை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
பழைமையான இந்தக் கோயிலில் கடந்த பிப்.26-ஆம்தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
விழாவின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், பக்தா்கள் நோ்த்திக் கடனாக உப்பு, கொழுக்கட்டை மற்றும் தானிய வகைகளை வீசி வழிபட்டனா். பின்னா், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
விழாவில், அசனமாப்பேட்டை கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேர் திருவிழாவை முன்னிட்டு காவல்துறை, மின்சார வாரியம், தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
