Close
மார்ச் 6, 2025 9:09 மணி

திருவண்ணாமலையில் பூமிக்கு அடியில் தங்கமா? புவியியல் ஆய்வுத்துறை தகவல்

இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில், இந்திய புவியியல் ஆய்வுத் துறையின், 175வது நிறுவன தினத்தையொட்டி, ஓய்வுபெற்ற அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது.

அதில், ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் பேசுகையில், திருவண்ணாமலை மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில், பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

இது குறித்து கூடுதல் ஆய்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தங்கம் தவிர, லித்தியம் அதிகம் இருக்கிறது. இதை வைத்து பேட்டரிகள் தயாரிக்க முடியும். இவையெல்லாம் குறித்து தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வின் முடிவில் பல விஷயங்கள் தெரிய வரும்  என்று கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மழை, வெயில் போல நில அதிர்வும் இயற்கையானது தான். தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக நில அதிர்வின் பதிவு அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டை பொருத்தவரை சென்னையில் நிலநடுக்கம் ஏற்படுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சென்னை வங்கக்கடல் ஓரத்தில் அமைந்திருக்கிறது. சென்னைக்கு அடியில் கருங்கல் பாறைகள்தான் அதிகம் இருக்கிறது. எனவே, நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இருப்பினும் கடற்கரை ஓரத்தில் பல அடுக்குகளை கொண்ட கட்டிடங்களை கட்ட வேண்டாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நிலநடுக்கம் உலகம் முழுவதும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இது எந்த அளவுக்கு வெளிப்படுகிறது? என்பதை வைத்துதான் அதன் தீவிரம் இருக்கும். நிலநடுக்கம் குறித்தும் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை நாங்கள் அரசுக்கு தெரிவித்து வருகிறோம் எனக் கூறினார்.

இந்திய புவியியல் ஆய்வு மையம் தற்போது குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுகளின் அடிப்படையில் கனிமங்களை வெட்டி எடுத்து பயன்படுத்தினால் சர்வதேச முதலீடுகளை நம்மால் ஈர்க்க முடியும். மேலும் லிக்கியத்தை சரியாகப் பயன்படுத்தினால் சீனாவுக்கே நம்மால் சவால் விட முடியும். எனவே புவியியல் ஆய்வு மையம் விரைந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top