திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணையில் பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
பாஜக மாநில செயலாளர் ஆனந்தப்ரியா தலைமையில் பாஜகவினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர்.
மஞ்சங்கரணையில் வசித்து வரும் கும்மிடிப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் அப்போது காரில் வந்த நிலையில் அவரை வழிமறித்து அவரிடம் பாஜக நிர்வாகிகள் சமக்கல்வி அனைவரது உரிமை என்ற கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து எடுத்துரைத்தது அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.
தனியார் பள்ளியில் மூன்று மொழிகளை மாணவர்கள் கற்று கொள்வதாகவும், அரசு பள்ளி மாணவர்களும் மூன்று மொழியை கற்கும் வகையில் இந்த திட்டத்தை ஆதரிக்கும் வகையில் கையெழுத்திட வேண்டும் என்றனர்.
தொடர்ந்து எல்லாபுரம் அதிமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமார் பாஜக நிர்வாகிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டார். செய்தியாளர்கள் படமெடுப்பதை கண்டு சுதாரித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ செய்தியாளர்களை பார்த்து போட்டோவுடன் அடக்கி வாசியுங்கள் என்றார்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனதளவில் உங்களுக்கு ஆதரவு இருப்பதாகவும், உங்கள் கட்சி இயக்கத்தை நீங்கள் பார்க்கிறீர்கள், எங்கள் கட்சி இயக்கத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றார்.
மும்மொழி கொள்கைக்கு அதிமுக ஒருபுறம் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி வரும் நிலையில் 3முறை எம்எல்ஏவாக இருந்த எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் பாஜக இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பவாரியா கொள்ளை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தின் மகன் விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில செயலாளர் ஆனந்தப்ரியா கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள திமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை எனவும், வேலை வாய்ப்பு இல்லை எனவும், இதன் காரணமாக மத்திய அரசு மீது பழி போட முயற்சிப்பதாக கூறினார்.
உள்துறை அமைச்சர் தொகுதிகளை குறைக்கும் நோக்கம் இல்லை என தெளிவாக கூறிய போது அனைத்து கட்சி கூட்டத்திற்கான அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பினர்.
நடிகர் விஜய் அறிக்கை குறித்த கேள்விக்கு தமிழ்நாட்டிற்கு தொகுதி குறையாது, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடந்து கொள்ளாது என்றார்.
தமிழ்நாட்டில் பாலியல் விவகாரங்களுக்கு எதிராக அனைவருமே போராட வேண்டும் எனவும், பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரித்திட வேண்டும் என கேட்டு கொண்டார். அரசு துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ தந்தையாக தங்களுடைய மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியில் அவரை அணுகவில்லை என்றார்.
மொழி போருக்காக தற்போது 1000பேர் கூட உயிரை துறக்க தமிழ்நாடு தயாராக இருப்பதாக உதயநிதி கூறியது பற்றிய கேள்விக்கு தமிழ்நாட்டில் அரசு மொழியை வைத்து அரசியல் செய்வதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள நிலையில் குறிப்பிட்ட துறைகளில் உள்ள வளர்ச்சி குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்க தயாராக இல்லை எனவும், மத்திய அரசை மட்டுமே குறை கூறி ஆட்சி நடைபெற்று வருவதாக கூறினார்.