Close
மார்ச் 15, 2025 8:21 காலை

தந்தைக்குத் திதி கொடுத்த அருணாசலேஸ்வரா் , ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

திருவண்ணாமலையில் மாசி மகத்தை ஒட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடைபெற்றது.

ஆண்டுதோறும் திருவண்ணாமலையை  அடுத்த  பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டு புதன்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு  கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று  கோவிலில் இருந்து காலை 10.30 மணிக்கு கோயில் திட்டிவாசல் வழியாக உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நிகழ்சிக்காக புறப்பட்டாா்.

வழிநெடுகிலும் பக்தர்களுக்கு காட்சி அளித்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் கொண்ட பள்ளிகொண்டாபட்டு கிராமத்தில் உள்ள கௌதம நதிக்கரையை வந்தடைந்தார்.

பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதிக்கு அருணாசலேஸ்வரா் வந்ததும் உற்சவருக்கும், சூலம் வடிவிலானஅருணாசலேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பிறகு, சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரரை சிவாச்சாரியா்கள் கௌதம நதியில் மூழ்கி எடுத்து தீா்த்தவாரி நிகழ்ச்சியையும், தந்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட, திருவண்ணாமலையை ஆண்ட மன்னா்களில் ஒருவரான வல்லாள மகாராஜாவுக்கு அருணாசலேஸ்வரா் திதி கொடுக்கும் நிகழ்வையும் நடத்தினா்.

அப்போது, பள்ளிகொண்டாப்பட்டு, சம்மந்தனூா், திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். இவா்கள் தங்களின் முன்னோருக்கு திதி கொடுத்து, கௌதம நதியில் நீராடி அருணாசலேஸ்வரரை வழிபட்டனா்.

தீர்த்தவாரி நடைபெறும் இடத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் ஏராளமான போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திதி கொடுக்கும் நிகழ்வு முடிந்ததும் வழிநெடுகிலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தபடி அருணாசலேஸ்வரா் புதன்கிழமை இரவு மீண்டும் கோயிலுக்குச் சென்றாா்.

மகுடாபிஷேகம்  இன்று வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு மகுடாபிஷேகம் நடைபெறுகிறது.

110 ஆம் சிறப்பு மண்டகப்படி

தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு புறப்பட்ட ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்  உண்ணாமுலையம்மனுக்கு வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் கூடி மண்டகப்படி கொடுத்து வழிபட்டனா். அதன்படி 110 ஆம் ஆண்டு மண்டகப்படி நிகழ்வாக திருவண்ணாமலை பிரபல பத்திர எழுத்தாளர் ஏடி முனுசாமி பிள்ளை, நினைவாக லாயர் சந்திரமோகன் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு மண்டக படியும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நீர்மோர் ஆகியவை வேடியப்பன் கோவில் தெரு சக்தி விநாயகர் கோவில் அருகில் வழங்கினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top