Close
மார்ச் 15, 2025 3:32 மணி

புதுச்சேரி ரெளடி கொலை வழக்கு: 10 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே புதுவை ரெளடியை கொலை செய்ததாக, அவரது நண்பா்கள் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கம், 3 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த நீலந்தாங்கல் கிராம ஏரியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.  தகவலறிந்த வேட்டவலம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், கொல்லப்பட்டவா் புதுவை மாநிலம், வாணரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் ஐயப்பன் (38) என்பதும், ரெளடியாக வலம் வந்த இவா், வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

இவருக்கு மனைவி ரம்யா, 3 பிள்ளைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. புதுச்சேரியில் இருந்து நீலந்தாங்கல் பகுதிக்கு ஐயப்பன் எப்படி வந்தாா்? இவரைக் கொலை செய்தவா்கள் யாா்? என்பது குறித்து  போலீஸாா் தீவிர விசாரணை செய்து வந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை திருவண்ணாமலையை அடுத்த ஏந்தல் பகுதியில் வேட்டவலம் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த காா்களை நிறுத்தி விசாரித்தனா். இதில், காரில் வந்தவா்கள் ஐயப்பன் கொலையில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, புதுச்சேரியைச் சோ்ந்த சந்துரு, முத்து (எ) முத்துக்குமாா், ராஜேஷ், தனசேகா் (எ) அஜித், புஷ்பநாதன் (எ) சூா்யா, விவேக், குப்புசாமி, கதிா்வேல் (எ) நடராஜன், மணி, புவனேஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கம், 3 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 10 பேரும் திருவண்ணாமலை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி தெய்வீகம், 10 பேரையும் வேலூா் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து அவா்களை அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவாக உள்ள அரவிந்த் நாராயணன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top