Close
மார்ச் 16, 2025 12:01 காலை

சிறுநீரக நோய் வேகமாக வளர்ந்து வருவது கவலையளிக்கிறது: மதுரை மீனாட்சி மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள்!

உலக சிறுநீரக (மார்ச் 13-ந்தேதி) தினத்தையொட்டி மதுரை மீனாட்சி மருத்துவமனை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை கருத்தரங்கில் நடைபெற்றது.

இதில் மதுரை மீனாட்சி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் சம்பத்குமார், சிறுநீரகப்பாதையியல் துறை தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் கண்ணன் ஆகியோர் சிறுநீரகத்தை பாதுகாப்பது குறித்த சிறப்பு விழிப்புணர்வு நூலை வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து பேசிய மருத்துவ நிபுணர்கள் பல்வேறு தகவல்களையும், தரவுகளையும் பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாடு மாநிலத்தின் கிராமப்புற மக்கள் தொகையில் 8 முதல் 19 சதவீதம் இடைப்பட்ட நபர்களிடையே காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் (CKDu) காணப்படுவதாக ஒரு சமீபத்திய ஆய்வு ஒன்றை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் இது குறித்து மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறுநீரகவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் சம்பத்குமார் கூறியதாவது:-
“காரணம் உறுதியாக அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோயை எதிர்த்து போரிட பல்வேறு முயற்சிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. குடிநீர் மற்றும் துப்புரவு நிலையை மேம்படுத்துவது, தொழில் மற்றும் பணி சார்ந்த ஆபத்துகள் குறித்து கற்பிப்பது, ஆரம்ப அறிகுறியை அடையாளம் காண்பதை ஊக்குவிப்பது மற்றும் கிராம சுகாதார செயல்திட்டங்களில் எளிதில் அணுகிப்பெறக்கூடிய ஸ்கிரீனிங் (அடிப்படை சோதனை) செயல்பாட்டை ஒருங்கிணைத்து அடையாளம் காண்பது அவசியம்.’

“நம் நாட்டில் சிறுநீரக நோய் என்பது வேகமாக வளர்ந்து வரும் கவலைக்குரிய பிரச்சனையாக இருக்கிறது. வயது வந்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 10-15% நபர்களிடம் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் குடும்பத்தில் இருக்கும் வரலாறு போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளது.

சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை குறிப்பாக இரவில் அதிகரித்திருப்பது அல்லது குறைந்திருப்பது, நுரைத்தல் அல்லது இரத்தம் கலந்திருப்பது போல சிறுநீர் தோற்றத்தில் மாற்றங்கள் போன்ற குறிப்பிட்ட சில மாற்றங்கள் சிறுநீரக கோளாறுக்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டலாம்.

களைப்பு மற்றும் பலவீனம், கணுக்கால்கள், பாதம் அல்லது கால்களில் விளக்க இயலாத வீக்கம் மற்றும் குறைந்திருக்கும் பசியுணர்வு அல்லது விருப்பம் ஆகியவை சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அம்சங்களாக இருக்கக்கூடும்.

“சிறுநீரக நோயானது ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் வெளிப்படுத்தாமல் சத்தமின்றி வளர்ச்சியடையும். எனவே இந்த பாதிப்பு நிலையை திறம்பட நிர்வகிப்பதற்கும் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர சிக்கல்கள் வராமல் தவிர்க்கவும் ஆரம்ப நிலையிலேயே ஸ்கிரீனிங் (அடிப்படை நோய் கண்டறிதல்) சோதனையை செய்வது இன்றியமையாதது.

60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், அதிக உடல்எடை இருப்பவர்களுக்கும், நீரிழிவு அல்லது அதிக இரத்த அழுத்த பாதிப்புள்ள நபர்களுக்கும் அவசியம் ஆண்டுக்கு ஒரு முறையாவது சிறுநீரக பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top