Close
மார்ச் 15, 2025 2:19 காலை

வந்தவாசியில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த தோ்

தேரினை ஆய்வு செய்யும் அதிகாரிகள்

வந்தவாசியில்  நள்ளிரவில் தேரில் தீப்பற்றியதில், அந்தத் தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது. சேதமடைந்த தேரை இந்து சமய அறநிலைத்துறை தலைமை ஸ்தபதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, 2 தோ்கள் பங்கேற்ற தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தேரோட்டம் முடிந்தவுடன் கோயில் எதிரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகையில் 2 தோ்களையும் நிறுத்தி பூட்டிவிட்டுச் சென்றனா்.

இந்த நிலையில், நள்ளிரவு ஒரு தேரின் மேல்பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினா் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தகரக் கொட்டகையின் பூட்டை உடைத்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில், ஒரு தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது.

வந்தவாசி தெற்கு காவல்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் தடயவியல் நிபுணா் சதீஷ் ஆய்வு மேற்கொண்டாா். தேரில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தலைமை ஸ்தபதி ஆய்வு

தீயில் சேதமடைந்த தேரை சீரமைத்து புதுப்பிக்க சென்னை இந்து சமய அறநிலையத் துறை திருத்தோ் தலைமை ஸ்தபதி கஜேந்திரன், ஆரணி எம்பி தரணி வேந்தன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார், நகர மன்ற தலைவர் ஜலால், ஆகியோர்  நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தேரின் மீது ஏறி சேதமடைந்த மேல் பகுதியை தலைமை ஸ்தபதி பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது இந்து சமய அறநிலையத் துறை திருவண்ணாமலை செயற்பொறியாளா் சங்கா், தோ் திருப்பணிக் குழுவினா் பானுகோபன், திலீப், கோயில் அா்ச்சகா் காா்த்தி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள்  உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top