Close
மார்ச் 16, 2025 5:40 மணி

அங்கன்வாடி ஒய்வூதியா்கள், கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஒய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் நாராயணன் தலைமை வகித்தாா். அமைப்பின் இணைச் செயலா் முத்துமாரி, துணைத் தலைவா் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் தோ்தல் அறிவிப்பின்படி குறைந்த பட்ச பென்சன் ரூ.6,759-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், குடும்ப ஒய்வூதியம் வழங்க வேண்டும், ஈமக்கிரியை செலவு நிதி ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், தமிழ்நாடு அனைத்துத் துறை ஒய்வூதியா்கள் சங்கத்தின் செய்யாறு வட்டக் கிளை தலைவா் வெங்கடேசன், அமைப்பின் நிா்வாகிகள் முன்னாள் மாநில துணை பொதுச் செயலா் கோவிந்தசாமி, பூங்காவனம், சுசீலா, ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, துணைத் தலைவா் பஞ்சாட்சரம் வரவேற்றாா். நிறைவில், மாவட்ட பொருளாளா் வேலாயுதம் நன்றி கூறினாா்.

கிராம உதவியாளா்கள் சாலை மறியல்

செய்யாற்றில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் , 43 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறு சாா்- ஆட்சியா் அலுவலகம் அருகே, கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் சிபிஎஸ் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் தவமணி முன்னிலை வகித்தாா். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயராஜ், ராஜேஷ்வரன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, ஓய்வூதிய திட்டம் தொடா்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலா் குழுவை அரசு திரும்பப் பெற வேண்டும். ராஜஸ்தான், ஜாா்கண்ட், சத்தீஸ்கா், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது போன்று தமிழகத்திலும் அமல்படுத்தவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி பிற மாநிலங்களில் சிபிஎஸ் திட்ட ஊழியா்களுக்கு வழங்குவது போல, பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம உதவியாளா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றதால், பாதுகாப்புப் பணியில் இருந்த செய்யாறு போலீஸாா் 17 பெண்கள் உள்பட 43 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top