Close
மார்ச் 18, 2025 4:48 மணி

அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் கட்டிடம் சரிந்ததால் பரபரப்பு..!

சரிந்துள்ள கட்டிடங்கள்

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலின் 4 மாட வீதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவூடல் வீதியில் சாலையின் இருபுறமும் பக்க கால்வாய்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவூடல் தெருவில் வசித்து வரும் அமர்நாத் என்பவருக்கு சொந்தமான 70 ஆண்டுகள் பழமையான இரண்டு அடுக்கு கட்டிடம் அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கு பக்கத்தில் மற்றொரு பழமையான கட்டிடமும் அமைந்துள்ளது.  சிமெண்ட் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் பக்க கால்வாய்க்காக ஜேசிபி எந்திரத்தை கொண்டு கால்வாய்க்காக பள்ளம் தோண்டும்போது அமர்நாத் என்பவருடைய வீடும் அதற்கு அருகாமையில் உள்ள மற்றொரு வீடும் முன்பகுதி முழுவதும் சரிந்து விழுந்து அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டு தீயணைப்பு துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு வீட்டுக்குள் இருந்தவர்களை மீட்டனர்.

வீட்டுக்கும் சாலைக்கும் இடையே பெரிய பள்ளம் ஏற்பட்டதால், வீட்டுக்குள் இருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. அதைத்தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வீட்டுக்குள் இருந்த இரண்டு முதியவர்கள் உட்பட ஐந்து பேரை பாதுகாப்பாக மீட்டு, வெளியே அழைத்து வந்தனர். அப்பொழுது 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இருந்ததால் அ ந்த மூதாட்டியை தீயணைப்பு துறையினர் சக்கர நாற்காலியில் வைத்து அவர்களை வீட்டிலிருந்து  மீட்டு அழைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள அமர்நாத் என்பவர் வீட்டில் உள்ள மக்கள் மற்றும் அருகாமையில் உள்ள மற்றொரு வீட்டில் உள்ள மக்கள் அனைவரும் அகற்றப்பட்டு பணி முடியும் வரை இந்த வீட்டில் யாரும் இருக்கக்கூடாது என அதிகாரிகள் கூறியதால் அவர்கள் அனைவரும் வெளியேறினார்.

வீட்டின் உறுதி தன்மை பாதித்திருப்பதால், வீட்டில் குடியிருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதால், அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக உறவினர் வீடுகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் கோரிக்கை

மேலும் இப்பகுதி மக்கள் கூறுகையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து செல்லக்கூடிய மாட வீதியில் இடிந்து விழக்கூடிய அபாயகரமான பழைய கட்டிடங்களை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய அதிகாரிகள் பார்வையிட்டு கட்டிடத்தில் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

விபரீதங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன்னர் அந்தப் பழமையான கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top