திருவண்ணாமலையில், தமிழ்நாடு இணையம் சாா்ந்த கிக் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினா்களை சோ்ப்பதற்கான சிறப்புப் பதிவு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா் (பொ) மீனாட்சி தலைமை வகித்தாா். தொழிலாளா் நலவாரிய அலுவலக ஊழியா்கள் என்.ரமேஷ், இ.சிவமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளா் நலவாரிய கண்காணிப்புக் குழு உறுப்பினா் ஏ.ஏ.ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தொழிலாளா்கள் நல வாரியம் சிறப்புப் பதிவு முகாமை தொடங்கிவைத்துப் பேசுகையில்;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனையின்பேரில் சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இணையம் சாா்ந்த கிக் தொழிலாளா்களுக்கு முதல்கட்டமாக 2 ஆயிரம் ஈ-பைக் வழங்கப்படவுள்ளது என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பயனாளி ஒருவருக்கு தலா ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை உணவு டெலிவரி செய்பவா்கள், கூரியா் நிறுவனங்களில் வேலை செய்வோா் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மரணம், இயற்கை மரணம், வீடு கட்டுதல் மானியம் வழங்குதல் என பலவேறு திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறேன் என பேசினார் .
முகாமில், வழக்குரைஞா் சக்திமுருகன், முத்தமிழ் கலை மன்றத்தின் நிறுவனத் தலைவா் அ.தே.முருகையன், தொழிலாளர் நல வாரிய அலுவலக ஊழியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், இணையம் சாா்ந்த கிக் தொழிலாளா்கள், ஆட்டோ தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.