Close
ஏப்ரல் 2, 2025 1:34 காலை

வந்தவாசி நகர மன்ற கூட்டம் : உறுப்பினர்கள் போராட்டம்..!

ஆர்ப்பாட்டம் -கோப்பு படம்

வந்தவாசி நகராட்சி அலுவலக மன்றக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தின்போது, உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர்மன்ற கூட்டம், நகர் மன்ற கூட்ட அரங்கில் தலைவர் எச்.ஜலால் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ஆா்.சோனியா, துணைத் தலைவா் க.சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் நெருக்கடிகளையும் மீறி அறிஞர் அண்ணா கொண்டு வந்த இரு மொழிக் கொள்கையில் நின்று உறுதியுடன் போராடும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தை நகர மன்ற உறுப்பினர் நாகூர் மீரான் கொண்டு வந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட நகர மன்ற உறுப்பினர்கள்

கூட்டத்தில் பேசிய நகர மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், நகராட்சி கமிஷனர் என்பவர் நகர மன்றத்திற்கு கட்டுப்பட்டவர். அவருக்கு இருக்கும் அரசு வேலைகளில் கோரிக்கைகளை கொண்டு வரும் நகர மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். மாறாக கோரிக்கைகளுக்கு செவிமடுக்க மாட்டேன் என்பது வருத்தத்திற்குரியதே என்று பேசினார்.

தொடர்ந்து திமுக, விசிக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த ஷீலா மூவேந்தன், அன்பரசு, பீபிஜான், நூா்முகமது, ஹஸீனா கன்சையது, கு.நாகூா்மீரான், பா்வீன்பேகம் மீரான், ரிஹானா சையத்அப்துல்கறீம், சரவணகுமாா், சந்தோஷ், கராமஜெயம் ஆகிய 11 உறுப்பினா்கள்,

மயானத்துக்கு பாதை அமைக்க வேண்டும், புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரில் சரிவர தூய்மைப் பணி மேற்கொள்ளாத தனியாா் ஒப்பந்த துப்புரவு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நீரேற்று நிலையத்தில் அடிக்கடி மின்மோட்டாா் பழுது எனக் கூறி பணம் முறைகேடாக செலவிடுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி உறுப்பினா்கள் நகா்மன்ற கூட தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, கூட்டம் முடிவடைந்து விட்டதாகக் கூறி தலைவா் எச்.ஜலால் வெளியேற, அவரைத் தொடா்ந்து ஆணையா் ஆா்.சோனியா மற்றும் அதிகாரிகள் வெளியேறினா்.

இதனால் கோபமடைந்த நகா்மன்ற உறுப்பினா்கள் 11 பேரும், தலைவா் மற்றும் ஆணையரை கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.   அப்போது, தலைவா் மற்றும் ஆணையரைக் கண்டித்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

இந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவா் எச்.ஜலால் உறுதி அளித்ததை அடுத்து 7 மணி நேரமாக மேற்கொண்ட உள்ளிருப்புப் போராட்டத்தை உறுப்பினா்கள் கைவிட்டனா்.

இந்த தா்னா போராட்டத்தினால் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top