Close
மார்ச் 31, 2025 11:24 மணி

காசநோய் முற்றிலும் கட்டுப்படுத்திய ஊராட்சிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில், காசநோய் இல்லாத கிராமம் எனும் இலக்கை அடைந்த ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றுகளை  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

உலக காசநோய் தினம் ஆண்டுதோறும் மார்ச் 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மேலும், வரும் 2030ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியா எனும் இலக்கை அடைய தீவிர களப்பணிகள் நடந்து வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டம் கடந்த 2024 ஆம் ஆண்டு காசநோயை 40% குறைத்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் வெள்ளி விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, காசநோய் ஒழிப்பில் தீவிரமாக களப்பணியாற்றிய ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் காசநோய் இல்லாத கிராமம் எனும் இலக்கை அடைந்த 30 கிராம ஊராட்சிகளுக்கு, பாராட்டுச் சான்றுகளை ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

இதனை தொடர்ந்து காசநோய் இல்லா இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான இந்த களப்பணியில் நாம் அ னைவரும் உறுதி ஏற்று, பங்களித்து பணி செய்திடுவோம் என அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 2024 ஆண்டு 98,423 பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு 2,486 நபர்களுக்கு காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், காசநோய் சிகிச்சை காலம் முழுவதும் மாதம் ₹1000 நேரடியாக சம்மந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் ஊட்டச்சத்துக்காக வரவு வைக்கப்பட்டது.

நமது திருவண்ணாமலை மாவட்டத்தில்,காச நோயாளிகளின் குடும்பத்திதலுள்ள அனைவருக்கும் காசநோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க காசநோய் தடுப்பு சிகிச்சை முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர நமது மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90% முழுமையாக குணப்படுத்தப்பட்டுள்ளனர், காசநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையை திருவண்ணாமலை மாவட்டத்தில் அடைய அனைவரும் உறுதியேற்று, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்   என ஆட்சியர் தர்ப்பகராஜ்  கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ், மருத்துவ இணை இயக்குநர்(காசநோய்) அசோக், மருத்துவர்கள், செவிலியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top