திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் பெரணமல்லூர் அடுத்த கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார்.
செய்யாறு சார் ஆட்சியர் பல்லவிவர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேத்துப்பட்டு தாசில்தார் அகத்தீஸ்வரர் வரவேற்றார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், 255 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
கிராமங்களை தேர்வு செய்து இது போன்ற மனுநீதி முகாம்களை நடத்துவதற்கான நோக்கம் அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட நல திட்டங்கள் அனைத்தையும் நேரடியாக கிராம மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்காக தான். முகாமில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். அதனால் கிராம மக்கள் அனைவரும் முகாமை பயன்படுத்தி பயன் பெற வேண்டும்.
பெண் குழந்தைகள் கல்வி கற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உதாரணமாக புதுமைப்பெண் திட்டம்இதன் மூலம் பெண்களின் உயர் கல்வி உறுதி செய்யப்படுகிறது.
இதில் அவர்கள் எக்காரணம் கொண்டும் கல்வி கற்பது நிறுத்தி விடக்கூடாது. பெண் குழந்தைகள் எதனால் கல்வி கற்பதுதடைபடுகிறது என்பதற்கான காரணத்தை ஆராய்ந்தால் சமூகத்தில் மிகக் குறைந்த வயதில் திருமணம் செய்வது வழக்கமாக உள்ளது.
ஆகவே தாய்மார்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இதில் குறைந்த வயதில் திருமணம் செய்து வைத்தால் அவர்கள் இரண்டு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். ஒன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இரண்டு அவர்களது உயர் கல்வி தடைபடும்.
ஏனென்றால் கல்வியும், கல்வியைச் சார்ந்த ஆளுமையும் எதிர்காலவாழ்க்கையை உறுதி செய்யும். பொருளாதார தற்சார்பை கொடுக்கும். யாரையும் சார்ந்திருக்கும் கட்டாயத்தை கொடுக்காது. ஆகவே இங்கே இருக்கும் பெண்கள் அனைவரும் எப்பாடுபட்டாவது தமிழக முதல்வர் முன்னெடுக்கும் திட்டத்தை பயன்படுத்தி பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பொது சுகாதாரத்துறை சார்பாக தொடர் பரிசோதனைகள் மற்றும் தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றது.
அதேபோன்று கர்ப்பிணி தாய்மார்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் உடனுக்குடன் வழங்கப்படுகிறது . அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் பேசினார்.
தொடர்ந்து அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி சன்மதி கோயம்புத்தூரில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகளில் குத்து சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதை மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு திட்டங்கள் குறித்த விளக்கக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் தொடர்ந்து சேத்துப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.