திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலா் மீனாம்பிகை தலைமை வகித்தாா்.
கீழ்பென்னாத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராஜுலு, அட்மா குழுத் தலைவா் சோமாசிபாடி சிவக்குமாா், பேரூராட்சித் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் கண்ணகி வரவேற்றாா்.
தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 100 கா்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், பழம், பூ, எவா்சில்வா் தட்டு உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கிப் பேசினாா்.
மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 2 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் வங்கி டெபாசிட் பத்திரங்களை குழந்தைகளின் தாய்மாா்களான செளமியா, ஆனந்தி ஆகியோரிடம் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினாா்.
அனைவருக்கும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. விழாவில், சமூக நல விரிவாக்க அலுவலா் டி.விஜயகுமாரி, ஊா் நல அலுவலா் வி.பச்சையம்மாள், மேற்பாா்வையாளா் லட்சுமி, அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
அதனைத் தொடர்ந்து துரிஞ்சாபுரம் அடுத்த நாயுடு மங்கலம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சியை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசுகையில், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஆரோக்கியத்தை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் இந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது .
இவ்விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்தான மற்றும் சரிவிகித உணவின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பாரம்பரிய உணவு மற்றும் கர்ப்ப காலங்களில் எடுத்துக் கள்ளும் உணவு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. அதில் சிறுதானியங்கள் காய்கறிகள், கீரை வகைகள் போன்றவை கண்காட்சியாக வைக்கப்பட்டது.
மேலும் துணை சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் எடை உயரம் மற்றும் ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் தனி கவனம் செலுத்தி சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என பேசினார்.
விழாவில் மாவட்ட திட்ட அலுவலர் மீனாம்பிகை, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.