திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி 2.7 கிலோ மீட்டர்தொலைவு கொண்ட மாட வீதியில் முதல் கட்டமாக பேகோபுரம் முதல் காந்தி சிலை வரை சிமெண்டு சாலை ரூ.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுவுள்ளது.
அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக மாடவீதியில் மீதமுள்ள பகுதியில் ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.
மேலும் மாடவீதியிலுள்ள திருவூடல் தெரு பகுதியில் 230 மீட்டர் அளவுக்கு பக்க கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் மாடவீதியில் மின்வாரியம் மூலம் மின்கம்பங்களை அகற்றி புதைவட கம்பிகளாக இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தற்போது காந்தி சிலை அருகில் இருந்து 200 மீட்டர் அளவிற்கு சிமெண்டு சாலை அமைப்பற்காக சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி கோட்ட பொறியாளர் ஞானவேல் ஆகியோர் கூறுகையில்,
2-ம் கட்டமாக சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக மாடவீதி காந்தி சிலை அருகில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பள்ளம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் உள்ள பாதாள சாக்கடை குழிகளின் உறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, இன்னும் ஒரு வாரத்திற்குள் சிமெண்டு சாலைக்கான கான்கிரீட் அமைக்கப்பட உள்ளது என்றனர்.
தற்போது மாடவீதியில் சிமெண்டு சாலை (கான்கிரீட்) அமைக்கும் பணிகள் உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு மேற்பார்வையில் நடைபெற்றுவருகிறது.