Close
ஏப்ரல் 16, 2025 9:14 காலை

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்’- திக்குமுக்காடிய திருவண்ணாமலை..!

ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்  விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் விமர்சையாக நடைபெறும்.

சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் விமர்சையாக நடைபெறும்.

ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் பல்வேறு மாவட்ட மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பெளா்ணமி சனிக்கிழமை (ஏப்.12) அதிகாலை 4.13 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 6.03 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால் வெள்ளிக்கிழமை இரவு முதலே பக்தா்கள் கிரிவலம் வந்தனா். தொடா்ந்து, சனிக்கிழமை காலை முதல் இரவு வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். தொடா்ந்து, 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பக்தா்கள் கிரிவலம் வந்து, சுவாமி தரிசனம் செய்தனா். இந்நிலையில் நேற்று தமிழ் வருட பிறப்பு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்

இந்நிலையில் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக திருவண்ணாமலையில் ரயில் நிலையத்தில் விடியற்காலை முதல் குவிந்தனர்.

ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது.

திருவண்ணாமலை வந்தடைந்த ரயிலில் ,  ரயில் நிலையத்தில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர். ரயில் புறப்பட்டு சென்றும் ஏராளமான பக்தர்கள் அடுத்து வரும் ரயிலுக்காக காத்திருக்கும் சூழலும் ரயில் நிலையத்தில் நிலவியது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் ஒன்று கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது. பல லட்சம் பக்தர்கள் வருகை தரும் திருவிழா நாட்களில் திருவண்ணாமலை இருந்து காட்பாடி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் ரயில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பலமுறை பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் சிறப்பு ரயில் இயக்குவது இல்லை. எனவே திருவண்ணாமலைக்கு முக்கிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top