திருவண்ணாமலையில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
கிராமப்புறங்களில் 2000- 2001 ஆம் ஆண்டு வரை பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் கட்டித்தரப்பட்டு தற்பொழுது பழுது நீக்கம் செய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ள வீடுகளுக்குப் பதிலாக புதியதாக வீடுகள் கட்டித்தரும் நோக்கத்துடன் முதலமைச்சர் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் என்ற திட்டத்தை இந்நிதியாண்டு முதல் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செயப்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிகள் மீண்டும் 210 சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய நிரந்தரமான வீடு கட்டிக்கொள்ள அலகுத் தொகை ரூ 2.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தொகை தமிழ்நாடு அரசு மூலமாக நான்கு தவணைகளில் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெறுவதற்குப் பின்வரும் தகுதி மற்றும் வரம்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 2000- 2001 ஆண்டு வரை அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் வீடு பெற்றவராக இருத்தல் வேண்டும் இந்திரா நினைவுக் குடியிருப்பு திட்டம், தாட்கோ மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் போன்ற பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் 2000-01 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டு தற்போது பழுது பார்க்க முடியாத நிலையில் உள்ள ஓடுகள் மற்றும் சாய்தளக் கான்கீரிட் கூரை கொண்ட வீடுகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவையாகும்.
மறு கட்டுமானம் செய்யப்பட வேண்டிய வீடு பயனாளியின் பெயரில் அரசுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் ஒதுக்கீடு பெற்ற பயனாளி இறந்திருப்பாராயின் பயனாளியின் சட்டப்பூர்வ வாரிசாக உள்ள அவரது குடும்ப உறுப்பினர் அவ்வீட்டில் குடியிருக்க வேண்டும். அத்தகைய வீடுகள் மட்டுமே மறுகட்டுமானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்ப தாரர் இந்தத் திட்டத்தின் கீழ் மறுகட்டுமானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் வீட்டினைத் தவிர அவரது பெயரிலான சொந்தமாகக் கட்டப்பட்ட வீடு உடையவராகவோ அல்லது அரசின் பல்வேறு வகையிலான எந்தவொரு திட்டத்தின் கீழ் ஏற்கனவே வீடு பெற்றவராகவோ இருக்கக்கூடாது.
விற்கப்பட்ட வீடுகள், வாடகைக்கு விடப்பட்ட வீடுகள் மற்றும் சட்டப்பூர்வமற்ற வாரிசுகள் வசிக்கும் வீடுகள் ஆகியன இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியற்றவையாகும். ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அரசு ஊழியர்களுக்குச் சொந்தமான வீடுகள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள்,
வாரியங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் பணியிலிருப்போர் அல்லது அவர்களது வாழ்க்கைத் துணை ஆகியோரின் வீடுகள் மறுகட்டுமானத்திற்குத் தகுதியற்றவையாகும். பகுதி நேரம், ஒப்பந்த நியமனம் மற்றும் தினக்கூலி நியமனம் மூலம் பணியாற்றும் பயனாளிகளுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (வட்டார ஊராட்சி) எதிர் வரும் 21.04.2025 தேதி வரை அளிக்கலாம்.
பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டத்தின் கீழான தேர்வுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மறுக்கட்டுமானத்திற்கான உத்திரவு வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் இந்த சீரிய திட்டதினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.