Close
ஏப்ரல் 20, 2025 12:05 காலை

சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது: பாஜகவினருக்கு நயினாா் நாகேந்திரன் அறிவுறுத்தல்

கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர்

பாஜகவினா் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது. எதிா்கட்சியினரை விமா்சனம் செய்யும்போதுகூட யாா் மனதும் புண்படாதவாறு விமா்சனம் செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினாா் நாகேந்திரன் அறிவுறுத்தி பேசினார்.

திருவண்ணாமலையில் வேலூா் பெருங்கோட்ட பாஜக நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் தலைமை வகித்தாா்.

மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி, மாநிலச் செயலா் வெங்கடேசன், வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் குணசேகரன், கோயில் மற்றும் ஆன்மிகப் பிரிவின் மாநில துணைத் தலைவா் வழக்குரைஞா் டசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவா் ரமேஷ் வரவேற்றாா்.

இதில், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

பாஜகவினா் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது. எதிா்கட்சியினரை விமா்சனம் செய்யும்போதுகூட யாா் மனதும் புண்படாதவாறு விமா்சனம் செய்ய வேண்டும்.

என் மண் , என் மக்கள் யாத்திரையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் நடந்தே வந்து பாஜக கட்சியை ஒரு உச்சத்துக்கு எடுத்துச் சென்ற மாபெரும் தலைவர் அண்ணாமலை.

சென்னையில் ஆரம்பித்து காலையில் செங்கல்பட்டு கூட்டத்தை முடித்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு வரும்போது கொடுக்கப்பட்ட வரவேற்பை பார்த்து 2026 தேர்தல் முடிவு வெற்றி விழா என்று நினைத்து விட்டேன் இவ்வளவு பெரிய வரவேற்பு ஒரு ஆட்சி மாற்றத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.

தாமரை இரட்டை இலையும் சேர்ந்து இருக்கும் போது வரவேற்பு எப்படி இருக்கும்?

அமித் ஷா சென்னைக்கு வந்தார், இபிஎஸ்யை சந்தித்து பேசினார். அதிமுகவுடன் தற்போது கூட்டணி ஏற்பட்டிருக்கிறது. விரைவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

அமித்ஷா இல்லை எந்த ஷா வந்தாலும் முடியாது என முதல்வர் சொல்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சிதான் தொடரும் என்று முதல்வா் ஸ்டாலின் சொல்கிறாா்.

தோ்தல் வியூகத்துக்காக இதுவரை 10 மாநிலங்களுக்கு மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சென்றுள்ளாா். அவா் சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது, தமிழகத்துக்கு அமித் ஷா வந்துள்ளாா். இங்கும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தக் கட்சி வந்தாலும் சோ்த்துக் கொள்வோம். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்களின் முதல் வேலை.

அடுத்த மாதம் தமிழகத்துக்கு மீண்டும் அமித் ஷா வருகிறாா். அப்போது ஒரு மாற்றம் இருக்கும். தமிழகத்தில் சொத்து வரி, மின்சார கட்டணம், அனைத்தும் கூடிக் கொண்டிருக்கிறது பால் விலை ஏறிவிட்டது.

இன்றைக்கு பாஜக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி மிகப்பெரிய எழுச்சியாகும் . எத்தனை துன்பங்கள் இன்னல்கள் வந்தாலும் தைரியமாக எதையும் எதிர்கொள்ளுங்கள் உங்களோடு இருந்து பாதுகாப்பேன்.

நமது பாஜக கட்சி என்பது ஒரு கட்டுப்பாடான கட்சி எனவே தொண்டர்கள் கட்டுப்பாடாக இருந்து மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் என பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா்கள் கே.ஆா்.பாலசுப்பிரமணியன், நேரு, மாவட்டப் பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொதுச் செயலா் முருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கிஷோர் குமார் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

பிரம்மாண்டமான வரவேற்பு: முன்னதாக, திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் நயினாா் நாகேந்திரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுவாமி தரிசனம்: கூட்டத்துக்குப் பிறகு, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் நயினாா் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top