தமிழக அரசின் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெறத் தகுதியானோா் மே 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தமிழகத்தில் சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. 15 முதல் 35 வயதுக்குள்பட்ட 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ரூ.1,00,000 ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றைக் கொண்ட இந்த விருதைப் பெற விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சாா்ந்தோா் 15 முதல் 35 வயதுக்குள்பட்டவா்களாக இருக்கலாம்.
1.4.2024 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.3.2025 அன்று 35 வயதுக்குள் பட்டவராகவும் இருக்க வேண்டும். 1.4.2024 முதல் 31.3.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுவோா் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
இந்த விருது பெற தகுதியானோா் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் வரும் மே 3-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாா்.