Close
ஏப்ரல் 22, 2025 4:50 மணி

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரிய தமிழக அரசு

இந்தியாவின் ஆன்மீக நகரங்களில் மிகவும் புகழ்பெற்ற சைவ திருத்தலம் திருவண்ணாமலை ஆகும்.
இங்குள்ள அண்ணாமலையார் திருக்கோவில் உலக அளவில் மிக பிரசித்தி பெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆன்மீகத்துக்கு மட்டுமல்லாமல் அரசியல், விவசாயம்,பட்டு  என பல்வேறு துறைகளில் பிரபலமான பழமை வாய்ந்த நகரமாகும்.

தற்போது திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருவண்ணாமலையில்  மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாநிலம் முழுவதும் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மேம்படுத்தும் வகையில் மினி டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய நகரங்களில் ஏற்கனவே மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபடத் தயாரிப்பு, திட்ட மேலாண்மை என கடந்த ஆண்டே முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க, கட்டடத்துக்கான டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. ரூ. 34 கோடி செலவில் 4 தளங்களுடன் அமைக்கப்பட உள்ள இந்த டைடல் பூங்கா, ஓராண்டில் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த ஆண்டில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கனோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மினி டைடல் பார்க் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது அப்பகுதி இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. திருவண்ணாமலையில் அமைக்கப்படவுள்ள டைடல் பூங்காவின் மூலம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு தங்களது சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top