Close
ஏப்ரல் 23, 2025 7:03 மணி

அனைத்து ஆட்டோக்களிலும் கியூஆர்கோட் ஸ்கேனர் ஒட்டும் பணி : தொடங்கி வைத்த ஆட்சியர்..!

கியூ ஆர் கோடு பொருத்திய ஸ்டிக்கரை ஆட்டோவில் ஒட்டிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து ஆட்டோக்களிலும் முதன் முறையாக கியூஆர்கோட் ஸ்கேனர் பொருந்திய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே இருக்கிறது. தீபத் திருவிழா, பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட சிறப்பு விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை மாநகரத்தில் பல்வேறு ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. அதுமட்டுமன்றி பௌர்ணமி உள்ளிட்ட சிறப்பு விசேஷ நாட்களில் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் வந்து ஆட்டோ ஓட்டுவது வழக்கம்.

திருவண்ணாமலை மாநகரில் தினந்தோறும் ஆட்டோக்களின் வருகை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாத, வெளி மாவட்ட ஆட்டோக்களும் இங்கு அனுமதியின்றி இயக்கப்படுகிறது. அதனால், அதுபோன்ற ஆட்டோக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதோடு, குறைந்த தூரத்துக்கு கூடுதல் கட்டணம், அதனால் வாக்குவாதம் போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். திருவண்ணாமலை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி பக்தர்கள் சிரமமின்றி வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வதற்கு ஏதுவாக திருவண்ணாமலை மாநகரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறையும் இணைந்து முதன் முறையாக திருவண்ணாமலை மாநகரில் இயங்கி வரும் சுமார் 1750 ஆட்டோக்களுக்கு க்யுஆர் கோட் ஸ்கேனர்   ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் துவக்கி வைத்தார்.

ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகள், கியூஆர் கோடை தங்கள் செல்போனில் ஸ்கேன் செய்து, உரிய விபரங்களை அறிந்துகொள்ளலாம். மேலும், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது ஆட்டோ ஓட்டுநர்களின் கடமை. அப்போதுதான், நம்முடைய ஊரின் மீது நம்பிக்கையும், நன்மதிப்பும் ஏற்படும் என ஆட்சியர்  கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி, மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ், அமைப்புசாரா தொமுச மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் உள்பட பலர் உடனடிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top