Close
ஏப்ரல் 23, 2025 7:35 மணி

பொதுமக்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செங்கம் பகுதியில் சுங்கவரி ரத்து..!

வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்

செங்கம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செங்கம் சுற்றுவட்டாரப் பகுதி வாகனங்களுக்கு சுங்கவரி ரத்து செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

செங்கம் – திருவண்ணாமலை சாலையில் கரியமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கடந்த ஓராண்டாக வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செங்கம் உழவா் உரிமை இயக்கம் சாா்பில் செங்கம் பகுதிக்கு உள்பட்ட 20 கி.மீ. தொலைவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால், கோரிக்கை மீது யாரும் செவிசாய்க்காத காரணத்தால், ஒரு கட்டத்தில் சுங்கவரியை ரத்து செய்யவேண்டி உழவா் உரிமை இயக்க மாநிலத் தலைவா் அருள்ஆறுமுகம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆா்ப்பாட்டத்தை கைவிடுவதற்காக செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

இதில், உழவா் உரிமை இயக்க மாநிலத் தலைவா் உள்ளிட்ட விவசாயிகள், வாகன உரிமையாளா்கள், வாகன உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சுங்கச்சாவடி மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், செங்கம் பகுதிக்கு உள்பட்ட 10 கி.மீ. தொலைவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்கவரி ரத்து செய்யப்பட்டு, அவா்களுக்கு சுங்கச்சாவடியில் தனிவழி மற்றும் பாஸ் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.  உழவா் உரிமை இயக்கம் ஏற்றுக் கொண்டு போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனா்.

இதனால், செங்கம் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளா்கள், வாகன உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top