நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது அதேபோல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பன்முக இசைக் கலைஞர் டிரம்ஸ் சிவமணி அவர்கள், ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில், சுவாமி தரிசனம் செய்தார். முதலில் செழிஞ்சுடர் விநாயகர் மற்றும் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் , மானசா தேவியை வணங்கி உமா தேவியார் , குரு தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் , 27 மகான்கள் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். அவருக்கு ஆசிரமத்தின் சார்பில் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தேவார இன்னிசை
தொடர்ந்து தினசரி ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் நிகழும் தேவார இன்னிசையில் பங்கேற்று தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை ஆசிரம ஓதுவார் உடன் சேர்ந்து டிரம்ஸ் சிவமணி குழுவினர் இசைக்கருவிகளை வாசித்தனர்.
அப்போது சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சிவமணியின் பக்தி இசை கச்சேரியை கேட்டு ரசித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.