வீடூர் ஊராட்சி ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் பகுதியில் அடிப்படை வசதி செய்து கொடுக்க உறுதியளித்து, மாதங்கள் கடந்தும் பணி தொடங்காமல் காலதாமதம் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி ஆதி-திராவிட மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடுர் ஊராட்சியை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கூறியதாவது:
தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், பொது கழிப்பிடம், மற்றும் அருந்ததியர் மக்களுக்கு சுடுகாட்டு பாதை, தெரு மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24-9-2024 அன்று போராட்டம் அறிவித்தோம்.
இதனையடுத்து விரைந்து வந்த சம்மந்தப்பட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட்டு, சில பணிகளுக்கு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது, ஆனால் இதுநாள் வரை பணிகள் தொடங்கப்படாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்,
இது குறித்து சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன், ஆர்டி.முருகன், ஒன்றிய செயலாளர் டி.கெஜமூர்த்தி, கிளை செயலாளர் பி.மும்மூர்த்தி ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தெரிவித்தனர், அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.