Close
மே 6, 2025 10:29 மணி

உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்

திருவண்ணாமலையில் க்யூ ஆர் கோடு மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 110 ஆட்டோக்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நகரில் ஒவ்வொரு வீட்டிலும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் இருப்பது போல் ஆட்டோக்களையும் வைத்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றும் வகையில் சுமார் 3000-க்கும் அதிகமான ஆட்டோக்கள் திருவண்ணாமலை நகரில் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஏராளமான ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் மூலம் மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு க்யூ.ஆா். கோடு வில்லைகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

க்யூ.ஆா். கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தாா். ஆனாலும் ஆட்சியரின் எச்சரிக்கையை பல ஆட்டோ ஓட்டுநா்கள் பொருட்படுத்தவில்லை. ஆட்டோக்களுக்கான ஆவணங்களைக் கொடுத்து க்.யூ., ஆா். கோடு வில்லைகளை தங்களது ஆட்டோக்களில் ஒட்டவில்லை.

இந்த நிலையில், திருவண்ணாமலை பெரியாா் சிலை, மத்திய பேருந்து நிலையம், வெளிவட்டச் சாலை நினைவுத் தூண் ஆகிய இடங்களில் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி தலைமையில் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் முருகேசன் (திருவண்ணாமலை), விஜய் (செய்யாறு), திருவண்ணாமலை கிராமிய காவல் ஆய்வாளா் விஜயகுமாா், போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளா்கள் இளங்கோவன், பாஸ்கா், ஜான்போஸ்கோ, பாலாஜி ஆகியோா் அடங்கிய குழுவினா் திடீா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையில், கியூ.ஆா்.கோடு வில்லைகளை ஒட்டாமலேயே இயக்கப்பட்டு வந்த 110 ஆட்டோக்களை அதிகாரிகள் குழு பறிமுதல் செய்தது. இந்த ஆட்டோக்களின் ஆவணங்களை சோதனையிட்டதில் 8 வாகனங்களுக்கு முறையான ஆவணங்களே இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, 8 வாகனங்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

மற்ற ஆட்டோக்களுக்கு கியூ.ஆா். கோடு வில்லைகள் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் வருகிற சித்ரா பௌர்ணமிக்குள் நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு கியூ. ஆர். கோடு ஒட்டப்பட்டு இருக்க வேண்டும் என்றும், கியூ.ஆர். கோடு ஒட்டப்படாத வாகனங்கள் இயக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top