Close
மே 7, 2025 4:57 காலை

உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவத்தில் கருடவாகன சேவை

உத்திரமேரூர் நகரில் மிகவும் புகழ் பெற்ற சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

சுந்தரராஜ வரதனைப் பிரும்மா, ருத்ரன், பூதேவி, மார்க்கண்டேயர் முதலியோர் வழிபட்டு முத்தியடைந்தார்கள் என்பது தல புராண வரலாறாகும்.

இக் கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. அடித்தளத்தில் சுந்தர வரதராஜர் உள்ளார். இவர் நின்ற கோலத்தில் சேவை சாதிப்பார்.

அடுத்த தளத்தில் இருப்பவர் வைகுண்ட வரதர். மூன்றாவது தளத்தில் ரங்கநாதவரதர் பள்ளிகொண்டு என இக்கோயில் இப்படி மூன்று தளங்களாக உள்ளது.

இதுபோன்ற சிறப்புகள் பெற்ற இத்திருத்தலத்தின் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை மாலை என இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எம்பெருமான் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. பஞ்சவர்ண மாலை அணிந்து எம்பெருமான் கருட வாகனத்தில் திருக்கோயில் ராஜகோபுரம் அருகே கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற வகையில் எழுந்தருள பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா என முழக்கமிட்டு கற்பூர ஆரத்தி எடுத்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து உத்திரமேரூரின் முக்கிய வீதிகள் வழியாக எம்பெருமான் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கருட சேவை விழாவை ஒட்டி கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டது. வரும் ஞாயிறு அன்று திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top